ராஞ்சி: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் ராணுவத்துக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் கடந்த ஜனவரியில் அவர் கைது செய்யப்பட்டார். இதே வழக்கில் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், தரகர்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதன் தொடர்ச்சியாக ராஞ்சியை சேர்ந்த நிலத் தரகர் சேகர் பிரசாத் மகதோ நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் ராணுவ நிலத்தை அபகரிக்க மோசடியாக ஆவணங்களை தயார் செய்துள்ளார்.
அசல் ஆவணங்களில் ரசாயனத்தை பயன்படுத்தி முக்கிய தகவல்களை அழித்து, போலியான பெயர்கள், தகவல்களை சேர்த்து உள்ளார். ஜார்க்கண்டில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் பினாமியாகவும் செயல்பட்டு உள்ளார் என்பது தெரியவந்துள்ளது.