புதுடெல்லி: மத்தியப் பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள மதுபான ஆலையில் காயங்களுடன் பணியாற்றிய 58 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
மத்தியப் பிரதேசத்தின் ரெய்சன் மாவட்டத்தில் ‘சாம் டிஸ்டிலெரீஸ் அண்ட் ப்ரூவரீஸ் என்ற மதுபான ஆலை செயல்படுகிறது. இங்கு குழந்தை தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 12 மணி முதல் 14 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அவர்களின் கைகளில் காயங்கள் உள்ளதாகவும் குழந்தை தொழிலாளர் மீட்பு இயக்கத்துக்கு (பிபிஏ) தகவல் கிடைத்தது. இதையடுத்து அதன் இயக்குநர் மனீஷ் சர்மா மதுபான ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து அந்த ஆலையில் சோதனை நடத்தப்பட்டது. ரசாயனம் மற்றும் ஆல்கஹால் சூழலில் அங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றியதால், அவர்களது கைகள் தீக்காயத்தால் பாதிக்கப்பட்டது போல் இருந்தன. இதையடுத்து மதுபான ஆலையில் பணியாற்றிய 39 சிறுவர்களும், 19 சிறுமிகளும் அரசு உதவியுடன் மீட்கப்பட்டனர்.
இதுகுறித்து பிபிஏ இயக்குநர் மனீஷ் சர்மா கூறுகையில், ‘‘மதுபான ஆலையில் ஆல்கஹால் மற்றும் ரசாயனத்தின் நெடி தாங்க முடியவில்லை. அங்கு இந்த குழந்தைகள் எப்படி நீண்ட நேரம் பணியாற்றினார்கள் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இவர்களை பணிக்கு அமர்த்திய மதுபான ஆலை நிறுவனத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இதுகுறித்து ம.பி. முதல்வர் மோகன் யாதவ் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை மற்றும் காவல்துறையிடம் இருந்து விரிவான தகவல்கள் கிடைத்துள்ளன. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.