உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் (MLC) முகமது இக்பால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான பணமோசடி வழக்கின் ஒரு பகுதியாக, அவர்களுக்குச் சொந்தமான ரூ.4,440 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. இதில், அவர்கள், நடத்திவரும் சஹாரன்பூரிலுள்ள குளோக்கல் பல்கலைக்கழகம் மற்றும் 121 ஏக்கர் நிலம் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை முடக்கியிருக்கிறது. இந்த சொத்துக்கள் அனைத்தும் முகமது இக்பால் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் நிர்வகிக்கப்பட்டு, நடத்தப்பட்டு வரும் அப்துல் வஹீத் கல்வி அறக்கட்டளையின் (Abdul Waheed Educational and Charitable Trust) பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த அறக்கட்டளையின் மூலம் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வைத்திருப்பதாகவும், அவரது குடும்ப உறுப்பினர்கள் சட்டவிரோதமாக சுரங்கங்களின் உரிமையைப் புதுப்பித்து மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக இக்பால் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் வழக்கு விசாரணையை முடுக்கி விடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதோடு, முகமது இக்பால் துபாய்க்கு சென்றிருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவரின் நான்கு மகன்கள் மற்றும் சகோதரர் ஆகியோர்மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் அடிப்படையில் அவர்கள் சிறையிலடைக்கப்பட்டிருக்கின்றனர்.
இதுதொடர்பான, அமலாக்கத்துறை அறிக்கையில், “சஹாரன்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள அனைத்து சுரங்கங்களும் முகமது இக்பால் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமானவை. இவர், சட்டவிரோதமாக மணல் கடத்தல், உரிமம் புதுப்பித்தல், அரசு விதித்துள்ள வரம்பை மீறுதல் என்று பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் வருமான வரி (ITR) கட்டும்போது தன்னுடைய வருமானத்தைக் குறைந்தது காட்டியிருக்கிறார். ஆனால், இக்பால் நடத்திவரும் சுரங்க நிறுவனங்கள் மற்றும் இன்னபிற நிறுவனங்களுக்கு இடையே எந்த வணிகத்தொடர்பும் இல்லாமல் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத பரிவர்த்தனைகள் நடந்திருக்கிறது.
இறுதியில் இந்த தொகை அப்துல் வஹீத் கல்வி அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு போலி நிறுவனங்கள் மூலம் நன்கொடை என்ற பெயரில் போலியான வங்கி கணக்குகளிலிருந்து பணப்பரிவர்த்தனை நடந்திருக்கிறது. இந்த நிதியில் சஹாரன்பூரில் நிலம் வாங்குவதற்கும், குளோக்கல் பல்கலைக்கழகத்திற்கான கட்டடங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது இக்பால் தரப்பு சமர்ப்பித்துள்ள ஆவணங்களின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத சுரங்கங்களின் மூலம் ஈட்டிய ரூ.500 கோடிக்கு மேலான நிதி பல்கலைக்கழகத்துக்கு நிலம் வாங்குவதற்கும், கட்டடங்கள் கட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தற்போதைய நிலம் மற்றும் கட்டடம் உட்பட மேற்கூறிய சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.4,439 கோடி” தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88