மும்பையில் சிவசேனா(ஷிண்டே) வேட்பாளர் ரவீந்திர வாய்க்கர் வெற்றி பெற்றது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அவர் 48 வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றுள்ளார். அவரின் வெற்றியை எதிர்த்தும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரியும் சிவசேனா(உத்தவ்) வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளது. வடமேற்கு மும்பை தொகுதி வாக்குகள் எண்ணப்பட்ட இடத்திற்குள் வேட்பாளரின் மைத்துனர் மங்கேஷ் மொபைல் போனுடன் வந்தது கடந்த சில நாள்களாக சர்ச்சையாக இருந்து வருகிறது. மொபைல் போன் கொண்டு வந்து அதன் மூலம் ஒன் டைம் பாஸ்வேர்டு மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்து வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இக்குற்றச்சாட்டு தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அத்தொகுதி தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்சி சம்பவம் நடந்து 10 நாள்கள் கழித்து, அதாவது கடந்த 14-ம் தேதி இது குறித்து போலீஸில் புகார் செய்துள்ளார்.
“ஒன் டைம் பாஸ்வேர்டு மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை திறந்து வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்ய முடியும் என்று நாளிதழ் ஒன்றில் செய்தியும் வெளியாகி இருந்தது. இதையடுத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது மகாராஷ்டிரா எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பி கேள்விகள் கேட்டனர்.
சர்ச்சை ஏற்பட்டதை தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷன் இது தொடர்பாக விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தவறான தகவலை பரப்பியதற்காகவும், இந்திய தேர்தல் முறையில் சந்தேகத்தை கிளப்பியதற்காக சம்பந்தப்பட்ட நாளிதழுக்கு தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒன் டைம் பாஸ்வேர்டு மூலம் திறக்க முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வயர்லெஸ் தகவல் தொடர்பு வசதி கிடையாது. இது தொடர்பாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. அதனை சில தலைவர்கள் தவறான தகவலை உருவாக்க பயன்படுத்துகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எந்த வித வயர்லெஸ் இணைப்பும் இல்லாமல் இயங்கக்கூடியது. வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் முன்னிலையில்தான் அனைத்து விதமான செயல்களும் செய்யப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்த பிறகு கிடைக்கும் ஒப்புகை சீட்டுகளை எலக்ட்ரானிக் முறையில் எண்ண முடியாது. இது தொடர்பாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. ஒப்புகை சீட்டுக்கள் ஆள்கள் மூலம் தான் எண்ணப்படும். மும்பையில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளரின் உதவியாளர் மொபைல் போன் பயன்படுத்தியது தொடர்பாக தேர்தல் அதிகாரி போலீஸில் புகார் செய்திருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷனின் விளக்கத்தை தொடர்ந்து சிவசேனா(உத்தவ்) நிர்வாகி பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ”தேர்தல் அதிகாரியின் செயல்பாடுகள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது. தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்சி தேர்தலில் வெளிப்படை தன்மையை கொண்டு வருவதற்கு பதில், தேர்தல் அலுவலகத்தை மேலும் சிக்க வைக்கிறார். வடமேற்கு மும்பை தொகுதி தேர்தல் முடிவுகள் குறித்து தேர்தல் அதிகாரி வந்தனா பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியதில் சந்தேகங்களுக்கு பதில் கிடைப்பதற்கு பதில் மேலும் அதிகப்படியான சந்தேகங்கள் எழுந்துள்ளது”என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்று காங்கிரஸ் மூத்த தலைவர் பிரித்விராஜ் சவான் அளித்த பேட்டியில், ”வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டுள்ளது. ஆனால் வாக்கு எண்ணும் இடத்திற்குள் மொபைல் போன் பயன்படுத்தப்பட்டது குறித்து 14ம் தேதி புகார் செய்யப்பட்டுள்ளது. இதில் பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருக்கிறது. முதலில் வாக்குகள் எண்ணும் இடத்திற்குள் மொபைல் போன் கொண்டு வர யார் அனுமதித்தது?. என்ன தேவைக்காக போன் பயன்படுத்தப்பட்டது. எங்கிருந்து ஒன் டைம் பாஸ்வேர்டு சர்ச்சை எழுந்தது”என்று கேட்டுள்ளார்.
முன்னதாக வடமேற்கு மும்பை தொகுதி தேர்தல் அதிகாரி வந்தனா சூர்யவன்சியும் இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை ஒன் டைம் பாஸ்வேர்டு மூலம் திறக்க முடியாது என்றும், அது போன்று இயந்திரம் வடிவமைக்கப்படவில்லை என்றும், வயர்லெஸ் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தொடர்பு கொள்ள முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88