"இதுதான் எனக்கு மிகச்சிறந்த தந்தையர் தினம்…" – மகன் நடித்த ‘ஃபீனிக்ஸ்’ பட விழாவில் விஜய்சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, ‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ என்ற படத்தின் மூலம் கோலிவுட் திரையுலகத்திற்கு கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இப்படத்தை பிரபல சண்டைப் பயிற்சியாளரான அனல் அரசு இயக்குகிறார். குத்துச் சண்டையை மையமாக வைத்து ஆக்‌ஷன் – திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மகன் நடித்திருக்கும் படத்தின் டீசரைக் காண விஜய்சேதுபதி இவ்விழாவில் கலந்துகொண்டிருந்தார். சூரியாவும் ‘தந்தையர் தின’ பரிசாக இந்த டீசரை விஜய்சேதுபதிக்குக் காண்பித்திருக்கிறார். விஜய்சேதுபதியின் குடும்பமும், படக்குழுவும் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருந்தனர்.

ஃபீனிக்ஸ்: விஜய்சேதுபதி, அனல் அரசு, சூர்யா,

இது குறித்து மகிழ்ச்சியுடன் பேசிய விஜய்சேதுபதியின் மகன் சூர்யா, ” தந்தையர் தினத்திற்கு அப்பாவுக்கு ஒரு நல்ல சர்ப்ரைஸான பரிசு ஒன்றைக் கொடுக்க ஆசைப்பட்டேன். அதனால்தான் இந்த விழாவிற்கு அவரை அழைத்து டீசரை அவருக்கு சர்ப்ரைஸாகப் போட்டுக் காண்பித்தோம். இப்படத்தின் பூஜை அன்று ‘நான் வேற அப்பா வேற’ என்று ஜாலியாகத்தான் கூறியிருந்தேன். ரொம்ப சீரியஸாக அதைக் கூறவில்லை. எனது முதல் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்பதால் ஒரு பதற்றத்தில் இருந்தேன். அதனால் என் முகம் கொஞ்சம் சீரியஸாகத் தெரிந்திருக்கும். மற்றபடி நான் ரொம்ப ஜாலியான பையன்தான். நான் பேசியதை சமூக வலைதளங்களில் ட்ரால் செய்திருந்தனர். பெரிய பெரிய ஆட்களுக்கெல்லாம் ட்ரோல்ஸ் வருது. நான் சாதரணமானவன். எனக்கு ட்ரோல்ஸ் வருவதெல்லாம் சகஜம்தான்” என்று பேசியிருக்கிறார்.

இதையடுத்து பேசிய விஜய் சேதுபதி, “என் மகன் திரைத்துறைக்குள் வந்தது எதுவும் திட்டமிட்டு நடக்கவில்லை. ‘சங்கத் தமிழன்’ படத்தில் நடித்த பிறகு அனல் அரசு மாஸ்டர் என் மகனை சந்தித்துக் கதை சொன்னார். சும்மா கதை சொல்கிறார் என்று நினைத்தேன். ஆனால், சீரியஸாக கதை சொல்லி இப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இதை நான் துளியும் கற்பனை செய்யவில்லை. திரைத்துறைக்குள் தாக்குப் பிடிப்பது எவ்வளவு கடினம் என்பதை நான் என் மகனுக்கு சொல்லி இருக்கிறேன். ஏனென்றால் சினிமாவில் தாக்குப்பிடிப்பது மிக மிக கடினம்.

‘ஃபீனிக்ஸ் (வீழான்)’ பட டீசர்

நான் அனுபவித்த அழுத்தங்கள் என் குழந்தைக்கு எவ்வளவு பாரமாக இருக்கும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், அவனுக்கு இதுதான் பிடித்திருந்தது. அனல் அரசு என்ற அற்புதமான மனிதரின் மூலமாக அவன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறான் என்பதில் மகிழ்ச்சி எனக்கு. என் மகன் பிறந்து இதுவரைக்கும் 19 தந்தையர் தினம் கொண்டாடியிருக்கிறேன். ஆனால் இதுதான் எனக்கு மிகச்சிறந்த தந்தையர் தினம்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.