புதுடெல்லி: ஞாயிற்றுக்கிழமை அன்று நாடு முழுவதும் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். மொத்தம் இரண்டு தாள்களாக காலை மற்றும் மதியம் என தேர்வு நடத்தப்பட்டது.
இந்த சூழலில் தேர்வு முடிந்த பிறகு அதன் வினாத்தாள் இணையதளத்தில் வெளியாகி இருந்தது. அதனை ‘PadhaiAI’ எனும் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட செயலி ஏழு நிமிடங்களில் அனைத்து கேள்விக்கான விடைகளை கண்டு தெரிவித்துள்ளது. அதோடு 200-க்கு 170 மதிப்பெண்கள் எடுத்துள்ளது.
டெல்லியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இந்த செயலியின் செயல்பாடு குறித்த லைவ் டெமோ நேற்று (ஜூன் 16) நடத்தப்பட்டது. அதில் கல்வி துறை, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர்.
இந்த செயலியில் சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வுக்கான வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு அதற்கான விடையை கண்டு ஏஐ செயலி சொல்லியது. இந்த விடைகளை யுபிஎஸ்சி பயிற்சி அளித்து வரும் நிறுவனங்கள், வணிக ரீதியாக பரவலான மக்களின் பயன்பாட்டுக்கு கிடைக்கும் மைக்ரோசாஃப்ட், கூகுள் மற்றும் ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்களின் ஏஐ மாடல் அளித்த விடைகளுடன் ஒப்பிட்டும் பார்த்தன.
யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் PadhAI செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐஐடி கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் இணைந்து இதனை வடிவமைத்துள்ளனர். வரும் நாட்களில் இதே போல லைவ் நிகழ்வில் யுபிஎஸ்சி வினாத்தாள்களுக்கான விடைகள் தீர்வு காணும் நகர்வுகளை பலரும் முன்னெடுப்பார்கள் என PadhAI சிஇஓ கார்த்திகேய மங்கலம் தெரிவித்துள்ளார்.