திருநெல்வேலி: சாதிய ஆணவ படுகொலைகளை தடுப்பதற்காக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது: சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்தமைக்காக எங்களது அலுவலகத்தை மிகக் கடுமையாக தாக்கி உள்ளார்கள். சாதி மறுப்பு திருமணம் செய்பவர்கள் எங்களைத் தேடி வந்தால் நாங்கள் பாதுகாப்பு கொடுப்போம். நெல்லை சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதி அமைப்புகள் தான் இந்த பிரச்சினையை பெரிது படுத்துகின்றன. சாதி மறுப்பு திருமணம் செய்த பல குடும்பங்களை நாங்கள் வாழவைத்துக் கொண்டிருக்கிறோம். சமூகத்தில் ஒரு மறுமலர்ச்சியையும் மாற்றத்தையும் உண்டாக்கி சாதிய ஆணவ படுகொலை தடுப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிக நேரம் மற்றும் காலத்தை செலவழிகிறது.
மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு அந்தத் தொழிலாளிகளை அழைத்துக்கொண்டு முதல்வரை நேரில் சென்று சந்திப்போம். சாதிய ஆணவ படுகொலையை தடுப்பதற்காக சட்டப்பேரவையில் அரசு ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.