அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் வீரமுத்து. இவரது மனைவி ரேவதி. இவர்களது மகள் சங்கீதா. கும்பகோணம் அருகே உள்ள சுந்தர பெருமாள் கோயிலை சேர்ந்த பாலமுருகனுக்கு சங்கீதாவை திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்நிலையில் கர்ப்பமாக இருந்த சங்கீதாவிற்கு 38 நாள்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. சங்கீதா குழந்தையுடன் தன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது குழந்தையுடன் தூங்கிய சங்கீதா, கடந்த 14-ம் தேதி அதிகாலை கண் விழித்துள்ளார். அப்போது தன் அருகில் குழந்தை இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
வீட்டில் உள்ளவர்கள் குழந்தையை தேடியுள்ளனர். இதில் வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் குழந்தை உடலில் போர்வை சுற்றப்பட்ட நிலையில், இறந்து கிடந்துள்ளது. “என் குழந்தையைக் யாரோ கொன்னுட்டாங்க…” என தாய் சங்கீதா கதறியது, அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், குழந்தையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். தாத்தா, பாட்டியான வீரமுத்து, ரேவதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இதில் வீரமுத்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். இதில் அவர்மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் வீரமுத்துவை தனியாக அழைத்துச் சென்று விசாரணை செய்ததில், குழந்தையைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். இது குறித்து வீரமுத்து போலீஸ் வாக்குமூலத்தில், “எனக்கு ஜோதிடத்தின்மீதும், ஜாதகத்தின்மீதும் பெரிய நம்பிக்கை உண்டு. இந்நிலையில் என் மகள் சங்கீதாவிற்கு சித்திரை மாதம் ஆண் குழந்தை பிறந்தது, இதை நான் விரும்பவில்லை. அந்தக் குழந்தைக்கு சாத்விக் எனப் பெயரிட்டு, குடும்பமே குழந்தையைக் கொண்டாடி வந்தனர்.
ஏற்கெனவே என் மகள் திருமணத்திற்கு நிறைய கடன் வாங்கியிருக்கிறேன். வளைகாப்பு உள்ளிட்டவற்றுக்கும் கடன் வாங்கி சீர் வரிசை செய்தேன். இதனால் ஏற்பட்ட பண நெருக்கடி எனக்குள் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்நிலையில் குழந்தையும் சித்திரை மாதம் பிறந்ததால், நான் மேலும் விரக்தியடைந்தேன். சித்திரை மாதம் ஆண் குழந்தை பிறந்தால் என் குடும்பத்திற்கும், சம்பந்தி குடும்பத்திற்கும் ஆகாது… இந்த குழந்தையால் என் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் எனக் கேள்விப்பட்டேன். குழந்தை இருக்க இருக்க நமக்குத்தான் ஆபத்து என நினைத்தேன். இதனால் குழந்தையை தூக்கிச் சென்று எங்கேயாவது விட்டு விடலாம் என நினைத்தேன்.
ஆனால் எனக்குள்ளிருந்த மூட நம்பிக்கை அதற்கு இடம் கொடுக்கவில்லை. சம்பவத்தன்று என் மகள் அருகே குழந்தையான பேரன் தூங்கிக் கொண்டிருந்தான். அதிகாலை போர்வையுடன் சேர்த்து அவனை மெதுவாக தூக்கினேன். பின்னர் போர்வையை குழந்தை உடம்பின் மேல் சுத்தி வீட்டுக்கு பின் பக்கமிருந்த தண்ணீர் இருந்த பேரலுக்குள் போட்டுவிட்டேன். கொஞ்ச நேரத்தில் குழந்தையின் துடிப்பு அடங்கி விட்டது.
பின்னர் எப்போதும் போல் வீட்டுக்குள் சென்று படுத்து விட்டேன். எல்லோரும் குழந்தையை காணவில்லை என தேடிய போது நானும் சேர்ந்து தேடினேன். மூட நம்பிக்கையால் என் பேரனை நானே கொலை செய்து விட்டேன்” என்றுள்ளார். எப்படி கொலை செய்தார் என்பதை வீரமுத்து ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜன் முன்னிலையில் செய்து காட்டினார். போலீஸார் இதை வீடியோ பதிவு செய்து கொண்டனர்.
தாத்தாவே சொந்த பேரக் குழந்தையை மூடநம்பிக்கையின் மேல்கொண்ட நாட்டத்தின் காரணமாக, கொலைசெய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb