பட்டுக்கோட்டை ஆலடிக்குமுளை அருகே குதிரையேற்றம் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பட்டுக்கோட்டை முடிப்பூண்டார் நகரை சேர்ந்த ராஜ்குமார் வயது 41, இதை நடத்தி வருகிறார். நாட்டுச்சாலையை சேர்ந்த தமிழரசன் வயது 26 இதில் பார்ட்னராகவும், குதிரையேற்றப் பயிற்சியாளராகவும் பணி புரிந்தார். ஐந்துக்கும் மேற்பட்ட குதிரைகள் இங்குள்ளன. தினமும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குதிரையேற்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வருடமாக டாக்டர் ஒருவரின் மகளான 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி இந்த பயிற்சி மையத்தில் குதிரையேற்றப் பயிற்சி எடுத்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பயிற்சி நேரம் முடிந்த பிறகும் தமிழரசன் கூடுதல் நேரம் பயிற்சி அளிப்பதாக சொல்லி டாக்டர் மகளை மட்டும் இருக்க வைத்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். மேலும் அந்த சிறுமிக்கு செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பி பாலியல் தொந்தரவு செய்ததாக சொல்லப்படுகிறது. தமிழரசனின் தொந்தரவு தாங்க முடியாத சிறுமி, நடந்ததை தன் தந்தையிடம் சொல்லி அழுதிருக்கிறார். அதிர்சியடைந்த அவர், உடனே அதன் உரிமையாளரான ராஜ்குமாரிடம் இந்த விவகாரத்தை சொல்லி கண்டித்துள்ளார்.
ஆனால் அதை அவர் கண்டு கொள்ளாததுடன், தமிழரசனுடன் சேர்ந்து கொண்டு டாக்டரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை வெளியே சொன்னால் அசிங்கமாகிவிடும், அப்படி செய்யாமல் இருக்க பணம் கொடுக்க வேண்டும் என பேரம் பேசியுள்ளனர். இதையடுத்து டாக்டர், இது தொடர்பாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், ராஜ்குமார், தமிழரசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.