புதுடெல்லி: வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்றும், அந்தத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்றும், கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில் அக்கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் கார்கே, ராகுல் காந்தி மற்றும் பிரயங்கா காந்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கார்கே கூறியது: “ராகுல் காந்தி ரேபரேலி தொகுதி எம்.பியாக தொடர வேண்டும் என்று கட்சி முடிவு செய்துள்ளது. காரணம், இது பல தலைமுறைகளாக அவரது குடும்பத்துக்கு நெருக்கமானதாக உள்ளது. இந்த முடிவையே அத்தொகுதி மக்களும், காங்கிரஸ் கட்சியினரும் சிறந்ததாக கருதுகின்றனர்.
ராகுல் காந்தி வயநாடு தொகுதி மக்களின் மிகுந்த அன்பைப் பெற்றுள்ளதால், அம்மக்களும் அவர் அந்தத் தொகுதியில் தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால், விதிகள் அதற்கு அனுமதிப்பது இல்லை. எனவே, பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கட்சி முடிவு செய்துள்ளது,” என்றார். இதைத்தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, “நான் ஒரு பெண். என்னால் போராட முடியும். என்னால் வயநாட்டில் இருந்தும் போராட முடியும்” என்று கூறினார்.
பின்னர் பேசிய ராகுல் காந்தி, “எனக்கு ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய தொகுதிகளுடன் உணர்வுபூர்வமான தொடர்பு இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டு காலம் வயநாடு எம்பியாக இருந்தபோது, அத்தொகுதி மக்கள் என் மீது காட்டிய அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரியங்கா காந்தி வயநாட்டில் போட்டியிடுவார். ஆனால், நானும் அங்கு அடிக்கடிச் செல்வேன். அந்தத் தொகுதி மக்களுக்காக கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் .
ரேபரேலி தொகுதியுடன் எனது தொடர்பு பழமை வாய்ந்தது. அந்தத் தொகுதியை பிரதிநிதிப்படுத்துவதில் எனக்கு மகிழ்ச்சி. இருந்தாலும், இந்த முடிவு எளிதானது அல்ல, கடினமானது. வயநாடு தொகுதி மக்கள் என்னுடன் நின்று என்னை ஆதரித்தனர். மிகவும் கடுமையான நேரத்தில் போராடுவதற்கான ஆற்றலை எனக்கு கொடுத்தனர். வயநாடு மக்களுக்காக நான் எப்போதும் தயாராக இருப்பேன்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, நடந்த முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி-யான ராகுல் அங்கு மீண்டும் போட்டியிட்டார். இதன் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அவர், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியிலும் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் முடிவுகளில் ராகுல் இந்தியாவின் ஒரே வேட்பாளராக இரண்டு தொகுதிகளிலும் வெற்றிபெற்றார்.
வயநாடு தொகுதியில் ராகுல், சிபிஐ வேட்பாளர் ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகளில் வெற்றி பெற்றிருந்தார். உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் அவர் பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை 3,90,030 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளராக இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதி எம்பியாக தொடரவும், கேரளாவின் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்த நிலையில், அந்த தகவல் தற்போது உறுதியாகி உள்ளது.