“திமுக வெற்றிபெற இடைத்தேர்தலில் போட்டியிடாமல் பழனிசாமி ஒதுங்கிக் கொண்டார்” – தினகரன்

மானாமதுரை: “திமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக இடைத்தேர்தலில் போட்டியிடாமல் பழனிசாமி ஒதுங்கிக் கொண்டார்,” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “இடைத்தேர்தலில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக கூட்டணியும் போட்டியிடுகின்றன. நாங்கள் வெற்றி பெற அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். மக்கள் விரோத திமுகவுக்கு பாடம் புகட்டவே இடைத்தேர்தலில் நாங்கள் நிற்கிறோம். மற்ற கட்சிகள் போட்டியிடவில்லை என்பதற்காக அவர்களைப் பிடித்து இழுத்து வர முடியாது. தோல்வி பயத்தாலும், திமுகவை வெற்றிபெற வைக்கவும் இடைத் தேர்தலில் போட்டியிடாமல் பழனிசாமி ஒதுங்கி கொண்டார்.

கடந்த முறை திமுக கூட்டணியில் 38 எம்பிக்கள் இருந்தும் அவர்களால் நாடாளுமன்றத்தில் என்ன செய்ய முடிந்தது? கர்நாடகாவில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தான் ஆட்சியில் உள்ளது. அவர்கள் காவிரியில் தண்ணீர் தர மறுப்பதோடு, மேகேதாட்டுவில் அணைகட்ட முயற்சிக்கின்றனர். அதை மு.க.ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார். தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும் பணநாயகம் வென்றுள்ளது. திமுகவினர் பணம் கொடுத்ததுடன், தங்களுக்கு வாக்களிக்காவிட்டால் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவோம் என மக்களை மிரட்டியே வெற்றி பெற்றனர். இது நேர்மையான வெற்றியல்ல.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை போன்று வருகிற 2026-ல் திமுக மண்ணை கவ்வும். மக்களவைத் தேர்தலில் எங்களின் வெற்றியை பாதிக்கவே திமுக ‘பி’ டீமாக பழனிசாமி செயல்பட்டார். வாக்கு சதவீதம் குறித்து அவர் தவறான தகவலை கூறிவருகிறார். தென்மாவட்டங்களில் அதிமுக வாக்கு சதவீதம் கடுமையாக சரிந்துள்ளது. தவறானவர்களின் கைகளில் இரட்டை இலை இருப்பதை மக்கள் நன்றாக புரிந்துகொண்டு புறம்தள்ளிவிட்டனர். அதிமுகவுடன் அமமுக இணைவது என்பது சாத்தியமில்லாதது. மீண்டும் ஒன்றிணைவோம் என்ற வார்த்தைக்கே இடமில்லை. வாக்கு சதவீதம் அதிகரித்துள்ள நாம் தமிழர் கட்சிக்கு எனது வாழ்த்துகள்,” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.