சென்னை: உலக புகழ்பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் முகமது ரேலாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
உலக அளவில் புகழ்பெற்ற கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் முகமது ரேலா. சென்னை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட அறிவியல் கட்டுரைகளையும், ஆய்வு முடிவுகளையும் வெளியிட்டுள்ளார். 6,000-க்கும் அதிகமான கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சைகளை செய்துள்ள அவர், பிறந்து ஐந்து நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கும் கல்லீரல் மாற்று சிகிச்சை செய்து சாதனை படைத்தவர். இதற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சையில் 28 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவத்தை கொண்டிருக்குமம் முகமது ரேலாவை கவுரவிக்கும் வகையில், அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ சேவையாளர்கள் (ஏஎச்பிஐ) சங்கம் சார்பில் மதுரையில் இன்று (ஜூன் 17) நடைபெற்ற மருத்துவக் கருத்தரங்கில் முகமது ரேலாவுக்கு இந்த கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.