தமிழகத்தில் குடிநீர் தரத்தை மாதம் தோறும் பரிசோதனை செய்ய பொது சுகாதாரத் துறை உத்தரவு

சென்னை: உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக விநியோகிக்கப்படும் குடிநீர் தரத்தை மாதம் தோறும் பரிசோதனை செய்ய வேண்டும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு கடந்த 20 நாட்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குழாய்களில் கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கலப்பதும், குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்காததும் தான் இத்தகைய பாதிப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் பலர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கப்படும் குடிநீரை, மாதந்தோறும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று சுகாதார ஆய்வாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், “பொதுமக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் பணியில் உள்ளாட்சி அமைப்புகள் தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும். குடிநீர் தொட்டி அல்லது சுத்திகரிப்பு நிலையங்களில் எப்படி குளோரினேஷன் செய்யப்படுகிறதோ, அதேபோல், குழாய்கள் மூலம் வீடுகள் செல்லும் வரை சுத்தமான குடிநீராக செல்வதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் குறித்த விபரங்கள் பெற்று, அவர்கள் வசிக்கும் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை சுகாதார ஆய்வாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

குறிப்பாக, மாதம் தோறும் வீடுகளுக்கு வரும் குடிநீர் மாதிரிகளை சேகரித்து, ஆய்வகங்களில் பரிசோதனை செய்ய வேண்டும். குறைகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து சரிசெய்ய வேண்டும். பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். இரவில் கொதிக்க வைக்கப்பட்ட நீரை, அடுத்த நாள் குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது ஆகும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.