புதுடெல்லி: கவச வாகனங்களை இரு நாடுகள் இணைந்து தயாரிப்பது தொடர்பாக இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.
இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள், தளவாடங்கள் சிலவற்றை இந்தியாவே தயாரித்து வருகிறது. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை வெளிநாடுகளிடமிருந்து இந்தியா வாங்கி பயன்படுத்தி வருகிறது. இதேபோல் கவச வாகனங்கள், போர் வாகனங்கள் சிலவற்றையும் இந்தியாவே உள்நாட்டில் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் காலாட்படை கவச வாகனங்களை (ஐசிவி) இந்தியா, அமெரிக்கா கூட்டு சேர்ந்துதயாரிக்கவுள்ளன.
இதுதொடர்பாக இரு நாட்டுராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
8 சக்கரங்கள் கொண்ட ஸ்டிரைக்கர் ரக கவச வாகனங்கள் தயாரிப்பது தொடர்பான யோசனையை அமெரிக்கா வழங்கியுள்ளது. இந்த வகை வாகனங்களை நமது நாட்டின் உயரமான பகுதிகளிலும் பயன்படுத்த முடியும். இதையடுத்து அந்த வாகனத்தை இணைந்து தயாரிப்பது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
முதல் கட்டமாக இந்த கவச வாகனங்களை வெளிநாட்டு ராணுவ விற்பனை (எஃப்எம்எஸ்) திட்டத்தின் கீழ் வாங்குவது என்றும், அதன் பின்னர் இந்தியா, அமெரிக்கா இணைந்து தயாரிக்கும் என்றும் தெரிகிறது.
இதுகுறித்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த ஸ்டிரைக்கர் ரக கவச வாகனங்கள் திட்டம் இறுதி செய்யப்பட்டால், இந்தியாவுக்கு ஏற்றபடி அதைத் தயாரிப்பதற்கான வழிமுறைகளை ராணுவம் வழங்கும். லடாக், சிக்கிம் போன்ற அதிக உயரமான மலைப்பகுதிகளிலும் இதன் செயல்பாடு சிறப்பாக இருக்கும் வகையில் அது உருவாக்கப்படும்’’ என்றார்.
தற்போது இந்திய ராணுவத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பிஎம்பி-2 என்ற பெயரிலான 2,000 கவச வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் நீரிலும் தாக்குதல் நடத்தக்கூடிய ஐசிவி வாகனங்கள் நமது ராணுவத்துக்கு தேவைப்படுகிறது. ஆனால் ஸ்டிரைக்கர் ரக போர் வாகனங்கள் நீரில் தாக்குதல் நடத்தக்கூடியவை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டிரைக்கர் ரக கவச வாகனங்களை அதிக அளவில் அமெரிக்காஉற்பத்தி செய்து விற்பனை செய்துவருகிறது. சிங்கப்பூரில் கடந்தமாதம் நடைபெற்ற இந்தியா,அமெரிக்கா அதிகாரிகளிடையிலான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவில் கவச வாகனங்களை இணைந்து தயாரிப்பது குறித்துவிவாதிக்கப்பட்டது. இத்தகவலை அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஜே ஆஸ்டின்,அமெரிக்க தேசிய பாதுகாப்புஆலோசகர் ஜேக் சுலிவான் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில்வெளியாகும் என தெரிகிறது.