இந்திய அணி இதை செய்தாலே போதும்… ஆப்கானிஸ்தானை ஈஸியாக வீழ்த்தலாம் – இதுதான் பிளான்!

AFG vs IND Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் (ICC T20 World Cup 2024) தற்போது நடைபெற்று வருகிறது. குரூப் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நாளை முதல் சூப்பர் 8 சுற்று போட்டிகள் தொடங்க உள்ளன. நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் பல ஆச்சர்யங்கள் காத்திருந்த நிலையில், அதே நிலை சூப்பர் 8 (Super 8) வரை தொடருமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் இடையே உள்ளது. 

குறிப்பாக, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய முன்னணி அணிகள் குரூப் சுற்றுடன் தொடரை விட்டு வெளியேறி உள்ளன. அதுமட்டுமின்றி யாருமே எதிர்பாராத வகையில் அமெரிக்கா மற்றும் வங்கதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளன. ஆப்கானிஸ்தான் அணியும் சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்திருந்தாலும் அதில் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை. அந்த அணி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. 

ஆப்கானிஸ்தானுக்கு பின்னடைவு

இந்நிலையில், சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணி (Team Afghanistan) முதலில் இந்திய அணியைதான் எதிர்கொள்ள (IND vs AFG Match) உள்ளது. இந்திய அணி குரூப் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா என மூன்று அணிகளையும் தோற்கடித்து பெரும் நம்பிக்கை உடன் சூப்பர் 8 சுற்றில் காலடி எடுத்து வைத்துள்ளது. மறுபுறம் ஆப்கானிஸ்தான் அணியும் அதன் குரூப்பில் இருந்த நியூசிலாந்து உள்பட 3 அணிகளையும் தோற்கடித்து சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்தாலும், இன்று நடந்த மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் மிக மோசமாக தோல்வியைடந்ததால் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது எனலாம்.

பூரன் அதிரடி

இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கிய போட்டியில், மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்து 218 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 98 ரன்களை அடித்தார், இதில் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் அடக்கம். அவர் மூன்றாவது வீரராக களமிறங்கி கடைசி ஓவர் பேட்டிங் செய்தார். குறிப்பாக பவர்பிளேவில் அந்த அணி 92 ரன்களை குவித்து மிரட்டியது. இதுதான் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் பவர்பிளேவில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும். 

மிடில் ஆர்டர் பலவீனம்

மறுபுறம் ஆப்கானிஸ்தான் அணியோ 120 ரன்களை கூட தாண்டவில்லை. 104 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்தது. அந்த அணியின் மிடில் ஆர்டர் பலவீனமாக இருந்தது இந்த போட்டியிலும் தென்பட்டது. ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், குல்பதீன் நயிப் ஆகியோரை பேட்டிங்கில் ஆப்கானிஸ்தான் மிகவும் நம்பி உள்ளது. பந்துவீச்சிலும் சிறிய அளவில் சொதப்பிவிட்டால் ஆப்கானிஸ்தானை வீழ்த்திவிடுவது எளிதாகிவிடும்.

இந்திய அணி இதை செய்தால் போதும்…

எனவே, சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி (Team India), ஆப்கானஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்றால் எளிமையான திட்டத்தை வைத்துக்கொண்டாலே போதும். பிளேயிங் லெவனில் பெரிய மாற்றத்தை செய்ய வேண்டியதில்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் பும்ரா, அர்ஷ்தீப், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இருப்பதால் பார்படாஸ் மைதானத்தில் அக்சர் – ஜடேஜா – குல்தீப் இணையுடன் செல்வதே நல்லது. இந்த ஒரு மாற்றத்தை தவிர வேறு மாற்றம் செய்யத் தேவையில்லை. அக்சர் – ஜடேஜாவே போதும் என்றால் சிராஜ் உடனே செல்லலாம். இதில் பெரிய குழப்பத்திற்கு வாய்ப்பில்லை. 

அதேபோல், பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் தொடக்க ஓவர்களிலேயே டாப் ஆர்டரை காலி செய்துவிட்டால் வெற்றி எளிமையாகிவிடும். போட்டியில் டாஸ் மிகவும் முக்கியமாகும். மேலும், ரிஷப் பண்டை ஓப்பனிங்கில் இறக்கும் முயற்சியை இந்த போட்டியிலாவது இந்திய அணி பரிசோதித்து பார்க்க வேண்டும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.