இந்த காருக்கு ரூ.3 லட்சம் வரை தள்ளுபடி… ஹூண்டாயின் இந்த அறிவிப்புக்கு என்ன காரணம் தெரியுமா?

Huge Discount On Hyundai Cars: கடந்த மே மாதம் இந்திய கார் சந்தையில் மட்டும் முன்னணி 14 நிறுவனங்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 57 யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது. அதாவது கடந்தாண்டு மே மாதத்தை விட சுமார் 4.4% அதிகமாக விற்பனையாகி உள்ளது. அதேபோல், கடந்த ஏப்ரல் மாதத்தை விடவும் 3.6% அதிகமாக இந்த மே மாதத்தில் விற்பனை நடந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. 

அதிலும் குறிப்பாக மாருதி சுசுகி வழக்கம் போல் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்நிறுவனம் மட்டும் 1 லட்சத்து 44 ஆயிரத்து 2 யூனிட்களை விற்று, மொத்த சந்தையில் மட்டும் அதன் பங்களிப்பு 41.3% ஆகும். மாருதி சுசுகியை தொடர்ந்து விற்பனைில் ஹூண்டாய் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. ஹூண்டாய் கடந்த மே மாதம் 49 ஆயிரத்து 151 யூனிட்களை விற்றுள்ளது. வருடாந்திர விற்பனை சற்றே உயர்ந்தாலும், மாதாந்திர விற்பனையில் சற்று வீழ்ச்சியும் உள்ளது. இருப்பினும், டாடா நிறுவனத்தை விட விற்பனையில் ஹூண்டாய் முன்னணியில் இருப்பதை கவனிக்க வேண்டும். 

அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆப்பர் ஒன்றை வழங்கி உள்ளது. ஒரு காருக்கு மட்டுமின்றி பல கார்களுக்கு இந்த தள்ளுபடி ஆப்பரை அறிவித்துள்ளது. ஹூண்டாயின் Creta, i20 N Line மற்றும் Ioniq 5 ஆகிய கார்களுக்கு தள்ளுபடி விற்பனை கிடையாது. குறிப்பாக, ஹூண்டாய் Kona Electric, i20, Exter உள்ளிட்ட கார்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி ஜூன் 30ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். அந்த வகையில் எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதை இதில் காணலாம். 

ஹூண்டாயின் EV காரான Kona Electric ஒரே வேரியண்டில் வருகிறது. இதில் 39.3 kWh பேட்டரி பேக்கை கொண்டது. இதன் மோட்டார் மூலம் 136 PS பவரும், 395 Nm உச்ச முறுக்குவிசை கிடைக்கும். இதன் விலை ஷோரூம் செலவுகள் சேர்க்காமல் ரூ.23.84 லட்சமாகும். இதற்கு தற்போது 3 லட்ச ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் 2024இல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் Kona Electric மாடலில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை.

இதுபோக ஹூண்டாய் i10 காருக்கு ரூ.48 ஆயிரம் வரையிலும், i20 காருக்கு ரூ.45 ஆயிரம் வரையிலும், Aura காருக்கு ரூ.43 ஆயிரம் வரையிலும், Exter காருக்கு ரூ.10 ஆயிரம் வரையிலும், Venue காருக்கு ரூ.45 ஆயிரம் வரையிலும், Venue N Line காருக்கு ரூ.40 ஆயிரம் வரையிலும், Vena காருக்கு ரூ.35 ஆயிரம் வரையிலும், Alcazar காருக்கு ரூ.65 ஆயிரம் வரையிலும், புதிய Tuscon காருக்கு ரூ.50 ஆயிரம் வரையிலும், பழைய Tuscon காருக்கு ரூ.2 லட்சம் வரையிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

மேலும், இந்த தள்ளுபடியில் ரொக்கம் சார்ந்த தள்ளுபடி, எக்ஸ்சேஞ் போனஸ், கார்ப்பரேட் போனஸ் ஆகியவையும் அடங்கும். இதில் அதிகபட்சமாக ஹூண்டாய் Kona Electric காருக்கு மட்டுமே 3 லட்ச ரூபாய் வரையில் ரொக்கம் சார்ந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.