"`குட் நைட்' படம்தான் எங்க 9 வருடக் காதலைச் சேர்த்து வெச்சது!" – இயக்குநர் விநாயக் சந்திரசேகரன்

‘குட்நைட்’ படத்தின் மூலம் காமெடி, கலாட்டா, ஃபேமிலி சென்டிமென்ட் என கவனத்தை ஈர்த்து பாராட்டுகளைக் குவித்த இயக்குநர் விநாயக் சந்திரசேகரனின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. காதல் திருமணம் கைக்கூடிய மகிழ்ச்சிலும் நெகிழ்ச்சியிலும் இருக்கும் அவரிடம் ரியல் லைஃபில் நீங்கள் எப்படி, உங்கள் காதல் ஃப்ளாஷ்பேக் என்ன எனப் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம்…

“எங்களோடது ஒன்பது வருடக்காதல். இப்போ, பெற்றோர்கள் ஆசிர்வாதத்தோட திருமணத்துல முடிஞ்சதுல ரொம்பவே சந்தோஷம். எனக்கும் காதல் மனைவி பிரியா சங்கரிக்கும் சென்னைதான் சொந்த ஊர். காலேஜ் படிக்கும்போது நட்பானாங்க. அது காதலை நோக்கி நகர்ந்தது. படிச்சு முடிச்சதும் அவங்க ஐடி ஃபீல்டுக்குப் போனாங்க. இயக்குநர் ஆகிறதுதான் என்னோட கனவுங்கிறதால நான் சினிமாவுக்கு வந்துட்டேன்.

இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் திருமணம்

என்னோட கனவுகளுக்கு பிரியாதான் உயிர்கொடுத்து உறுதுணையா இருந்தாங்க. ஏன்னா, வீட்டுல கொடுக்கிற பாக்கெட் மணியைக்கூட எனக்கு கொடுத்து குறும்படம் எடுக்க உதவி பண்ணிருக்காங்க. உதவி இயக்குநரா இருக்கும்போதும், அவங்க சம்பாதிச்சதை கொடுத்து கஷ்டப்படாம என்னை இயக்குநர் கனவை நோக்கி ஓடவெச்சாங்க. ரொம்பக் கேரிங். பாசிட்டிவ் வைப்பை கடத்திக்கிட்டே இருப்பாங்க. என்னோட கரியரில் அவங்களோட பங்கு மிக முக்கியமானது. அப்படியொரு பேரன்பும் நம்பிக்கையும் கொண்ட காதலி இப்போ மனைவியா அமைஞ்சது வாழ்க்கையை அழகாக்கியிருக்கு.

பிரியாவோட குணம் அப்படியே அவங்க அண்ணனுக்கும். அதாவது என் மச்சான். காதலிக்கிற விஷயமும் சினிமாவுல இருக்கிறதும் அவருக்கு முன்னாடியே தெரியும். ஆனா, இத்தனை வருட காத்திருத்தலுக்கு ‘எப்போ படம் பண்ணுவேன்’ன்னு ஒரு வார்த்தைக்கூட கேட்டதில்லை. புரிதல் மிக்க அன்பான மனிதர். எங்கக் குடும்பமும் அப்படித்தான்.

எங்கக் காதலை வீட்ல சொன்னப்போ, ‘பிரியாவைப் பார்த்துக்கிற அளவுக்கு நீ ஜெயிக்கணும்’னு சொல்லி அப்பா சந்தோஷமா சம்மதம் தெரிவிச்சார். நான் சினிமாவுல இருக்கேன்னு பிரியாவோட அப்பா அம்மா ஆரம்பத்துல தயக்கம் காட்டினாங்க. என்னோட படம்னு பிரியா சொல்லாமலேயே அவங்க அப்பா அம்மாவை ’குட் நைட்’ படத்துக்குக் கூட்டிக்கிட்டு போயி காண்பிச்சிருக்காங்க.

வரவேற்பில் ரமேஷ் திலக் குடும்பத்தினர்

ரசிச்சு சிரிச்சு படம் பார்த்து ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லியிருக்காங்க. அப்புறம்தான் அது என்னோட படம்னு சொல்லியிருக்காங்க பிரியா. அப்புறம் திருமணத்துக்கு சந்தோஷமா ஓகே சொல்லிட்டாங்க. ’குட் நைட்’ என் வாழ்க்கையை குட்லைஃபா மாற்றியிருக்கு. ஏன்னா, எங்க காதலை சேர்த்து வெச்சது ‘குட் நைட்’தான்.

படத்துல வர்ற மோகன் குடும்பம்தான் எங்க குடும்பம். ஒரே கலகலப்பா இருக்கும். படம் முதல் நாள் பார்த்துட்டே நிறைய பேரு பாராட்ட ஆரம்பிச்சிட்டாங்க. சந்தோஷத்துல எங்கப்பா, அம்மாவோட அழுகையை கட்டுப்படுத்தவே முடியல. இந்த மாதிரி குடும்பங்கள் எல்லாம் பார்க்குறமாதிரி படத்தை எடுப்பான்னு எங்கம்மா சொன்னாங்க.

தியேட்டர்ல வெளியாகும்போது எப்படி பாராட்டினோங்களோ அதேமாதிரி ஓ.டி.டி-யில வெளியானபிறகும் பாராட்டிக்கிட்டே இருக்காங்க. இப்பவும் அதுபற்றி பேசிக்கிட்டே இருக்காங்க. முக்கியமா, நிறைய பேருக்கு ’குட் நைட்’ பர்சனலா கனெக்ட் ஆகியிருக்கு. அதுதான் இந்தப் படத்தோட வெற்றி.

சமீபத்துல என்னோட நண்பருக்கு கேன்சர் ஆபரேஷன் பண்ணினாங்க. அப்போ, அவரைப் பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு போயிருந்தேன். ’குட் நைட்’ இயக்குநர்ன்னு கேள்விப்பட்டு என்னைப் பார்க்க வந்த டாக்டர், என் கையை பிடிச்சுக்கிட்டு எங்களுக்கு ரொம்ப வருஷமா குழந்தை இல்ல. நானும் மனைவியும் இந்தப் படத்தை நாலஞ்சு தடவை பார்த்தோம்னு நெகிழ்ந்துபோயி சொன்னாரு.

வரவேற்பில் பிரதீப் ரங்கநாதன்

ரமேஷ் திலக்கை எங்க பார்த்தாலும் கட்டிப்பிடிச்சு எமோஷனாகிடுறாங்களாம். ரேச்சல் ரெபாக்காவை எல்லாரும் மஹாக்கான்னுதான் கூப்பிடுறாங்களாம். அந்தளவுக்கு அந்த கேரக்டர்கள் எல்லோர் மத்தியிலும் ஒன்றிடுச்சு. ’குட் நைட்’ மாதிரி எல்லோரையும் ரசிக்க வைக்குற சிந்திக்க வைக்குற படங்களை பண்ணணும்னு விரும்புறேன்.

எங்களோட திருமணத்துக்கு ’குட் நைட்’ படத்தோட மொத்த டீமும் வந்து வாழ்த்தினாங்க. சிவகார்த்திகேயன் அண்ணா, திருமணத்துக்கு வந்து ரொம்ப நேரம் இருந்து வாழ்த்தினது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. எனக்கு, தங்கத்துல செயின் போட்டது சர்ப்ரைஸா இருந்தது.

அப்பா, அப்பாவோட சிவா அண்ணன் வீட்டுக்குப் பத்திரிகை வைக்க போனப்போ, அவங்கக்கிட்டே ’குட் நைட்’ அவருக்கு எந்தளவுக்கு பிடிச்சிருக்குன்னு ரெண்டு மணிநேரத்துக்கு மேல பேசிக்கிட்டிருந்தாரு. அவர் ஒரு பெரிய ஹீரோ. அவ்ளோ நேரம் என் படத்தை பற்றி அப்பா அம்மாக்கிட்ட பேசினது அவங்களுக்கு ரொம்ப நிறைவா இருந்துச்சு. அவங்க ரொம்ப மனசு குளிர்ந்துட்டாங்க.

செயின் அணிவிக்கும் சிவகார்த்திகேயன்

அதேமாதிரி, இசைமைப்பாளர் ஷான் ரோல்டன், பிரதீப் ரங்கநாதன், ரமேஷ் திலக் மற்றும் நிறைய தயாரிப்பாளர்கள் வந்திருந்தாங்க. கோயில்ல சிம்பிளா திருமணம் பண்ணிக்கிட்டு ரிசப்ஷன் கிராண்டா பண்ணினோம்” என்பவரிடம், “உங்கள் படத்தின் ஹீரோ மணிகண்டன் என்ன கிஃப்ட் கொடுத்தாரு? உங்களுக்கும் அவருக்குமான நட்பு குறித்து…” என அடுத்த கேள்வியை முன்வைத்தோம்.

“மணிகண்டனே எங்களுக்கு ஒரு கிஃப்ட்தான். அதைவிட அவர் பெரிய கிஃப்ட் கொடுக்கணும்னு இல்ல. மணிகண்டன் எங்க குடும்பத்துல ஒருத்தர். எங்களோட எல்லா வீட்டு விசேஷங்களிலும் அவரும் ரமேஷ் திலக்கும் ஃபேமிலியா கலந்துக்குவாங்க. அப்படியொரு நட்பு. கோயிலில் திருமணம் நடந்தப்போ மணிகண்டன் ஆரம்பத்திலேர்ந்து முடியுறவரைக்கும் கூடவே இருந்து வாழ்த்திட்டு போனாரு. ரிசப்ஷனுக்கு முதல் ஆளா வந்து கடைசியா போனாரு. இதுலருந்தே, அவரோட நட்பு எப்படிப்பட்டதுன்னு புரிஞ்சிக்கலாம்.

மணிகண்டன்

அவரே எனக்கு கிஃப்ட்னாலும் எனக்கு ஒரு கிஃப்ட் கொடுத்திருக்கார். இனிமேதான் பிரிச்சுப் பார்க்கப்போறோம்” என்பவரிடம் ”குட் நைட் படத்துல மோகன் கதாப்பாத்திரத்தை சமத்துவமா காண்பிச்சிருப்பீங்க… ரியல் லைஃப்ல எப்படி?” என்று நாம் கேட்டபோது, “அந்தப் படத்துல மோகன் ஃப்ரைடு ரைஸ் செஞ்சு கொடுக்கிறதா இருக்கட்டும், டீ போட்டு கொடுக்கிறது எல்லாமே என்னோட பிரதிபலிப்புதான். திட்டமிட்டு அந்தக் காட்சிகளை வைக்கல. வழக்கமான காட்சிகளை மாதிரி அதையும் கேஷுவலா காட்டியிருப்பேன். என்னைப் பொறுத்தவரைக்கும் பெண்களை சமமா நடத்துறேன், சமத்துவம் கொடுக்கிறேன்ங்குறதே ஒருவித ஆணாதிக்க மனநிலைதான்” என்கிறார் அழுத்தமாக.

வாழ்த்துகள் ப்ரோ!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.