மத்திய வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவுக்கு (WCCB), சட்டவிரோதமாக யானை தந்தத்தை விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஸ் உத்தரவுப்படி, திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா மேற்பார்வையில் வன உயிரின பொருள்கள் சட்டவிரோத வணிகத்தை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் தலைமையிலான இந்த தனிப்படை திருச்சி, ஸ்ரீரங்கம், திருவானைக்கோயில், எடமலைப்பட்டி புதூர், சேதுராப்பட்டி உள்ளிட்டப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சந்தேகப்படும் இடங்களில் சோதனை நடத்தி வந்தனர். சந்தேகத்துக்கு இடமான நபர்களை பிடித்து அவர்களிடம் தீவிட விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஸ்ரீதர் என்பவர் வீட்டில் சோதனை செய்ததில், அவரது வீட்டில் 2.9 கிலோ கிராம் எடையுள்ள யானை தந்தம் மற்றும் புள்ளி மான் தோல் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், அதிகாரிகள் உடனடியாக அந்த பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், சட்ட விரோத வணிகத்திற்கு உடந்தையாக இருந்த வெங்கடசுப்பிரமணியன், பாண்டுரங்கன் மற்றும் முரளி ஆகியோர்களையும் கைது செய்து மேல் விசாரணைக்காக திருச்சி வனச்சரக அலுவலககத்துக்கு அழைத்து வந்தனர். அப்போது, அவர்களிடம், யானை தந்தம் யாரிடமிருந்து பெறப்பட்டது. இந்த வணிகத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என தீவிர புலன் விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு, கைது செய்யப்பட்ட அந்த நான்கு பேரையும் ஸ்ரீரங்கம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர்படுத்தி 15 நாள்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். விற்பனைக்காக யானை தந்தம் மற்றும் புள்ளிமான் தோல் வைத்திருந்த நபர்களை வனத்துறையினர் பிடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.