சென்னை: சென்னை விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமையும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. கடந்த 2 வாரத்தில் 6-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் விமான நிலையத்தில் பாதுகாப்பும், சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில் வந்த இமெயிலில், சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுபற்றி வெடிகுண்டுகள் கண்டறியும் நிபுணர்கள் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விமான பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் நிபுணர் குழுவினர், விமான நிறுவன அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை விமான நிலையம் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டன. விமான நிலைய வாகனங்கள் நிறுத்தும் இடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சென்னை விமான நிலையத்துக்கு வரும் சந்தேகத்துக்கிடமான வாகனங்களை நிறுத்தி வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் இமெயில் புரளி என்பதும், அந்த இமெயில் துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் இருந்து வந்திருப்பதும் தெரியவந்தது.
இதுதொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “கடந்த இரண்டு வாரத்தில் சென்னை விமான நிலையத்துக்கு 6-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சோதனையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்து வெடிகுண்டு மிரட்டலும் புரளி தான். இந்த முறை துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் இருந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் இமெயில் வந்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பும், சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுபோல் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் கூறியிருக்கிறோம்” என்றனர்.