இந்தியச் சமூகத்தின் கொடூரமான சாதிவெறியையும் அதன் விளைவாக எழும் ஆணவக்கொலையையும் கதைக்களமாகக் கொண்ட `கன்னிமாடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் போஸ் வெங்கட்.
முதல் படம் கவனமும் வரவேற்பும் பெற்ற நிலையில் அடுத்து விமலை வைத்து ‘மா.பொ.சி.’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடும் இப்படத்தின் தலைப்பை இப்போது ‘சார்’ என மாற்றியிருக்கிறார்கள். நாளை படத்தின் டீசர் வெளியிடும் பிஸியில் இருந்த இயக்குநர் போஸ் வெங்கட்டிடம், “மா.பொ.சி.தலைப்பை மாற்றியது ஏன்?” எனக் கேட்டால், நடந்த விஷயத்தைப் போட்டுடைத்தார்.
“ஒரு தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. நான் பிறந்து வளர்ந்த அறந்தாங்கியில் படப்பூஜையை ஆரம்பித்ததுடன், முழுப்படப்பிடிப்பையும் அங்கேயே முடிச்சிட்டு வந்துட்டோம். என் முதல் படம் ‘கன்னிமாடம்’ படத்தை விகடன் ரொம்பவே உச்சி முகர்ந்து கொண்டாடியது. இந்நிலையில்தான் என் அடுத்த படத்தையும் சமூக அக்கறை கொண்ட படமாக இயக்கியிருக்கேன். இதுல வித்தியாசமான விமலைப் பார்க்கலாம். இதில் அவர் ஆசிரியரா வர்றார். ‘கன்னிமாடம்’ சாயாதேவி, மகேஷ்பிள்ளை, ‘பருத்தி வீரன்’ சரவணன், நெறியாளர் செந்தில், விஜய் முருகன்னு கதைக்கான ஆட்கள் இருக்காங்க. தயாரிப்பாளர் சிராஜ் வில்லனா நடிச்சிருக்கார்.
‘கன்னிமாடம்’ இனியன் ஜே.ஹாரிஸ் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ சித்துகுமார் இசையில் ஐந்து பாடல்கள் இருக்கு. இப்படி ஒரு நல்ல டீம் அமைந்ததால்தான் மொத்த படப்பிடிப்பையும் 34 நாள்கள்ல முடிச்சிட்டு வந்துட்டோம். ஒரு நல்ல படைப்பை மக்கள்கிட்ட கொண்டு சேர்க்க விரும்பிய வெற்றிமாறன், அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயரிலேயே இந்தப் படத்தை வெளியிடுகிறார்.
படத்தின் தலைப்பு ‘மா.பொ.சி.’ என வெளியானதும், நடிகர் சிவகுமார் சார் எங்களைக் கூப்பிட்டார். ‘ம.பொ.சி.ங்கறது (ம.பொ.சிவஞானம்) ஒரு பெருந்தலைவரோட பெயர். அவரோட பெயரில் அவர் வாழ்க்கையை ஒரு டாக்குமெண்ட்ரியாக பண்ண விரும்புறாங்க. அதனால நீங்க வேற டைட்டில் வச்சுக்குங்க’ன்னு சொன்னார். படத்துல ஹீரோவோட பெயர் ‘மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’ என்பதின் சுருக்கம்தான் ‘மா.பொ.சி.னு டைட்டில் வச்சிருக்கோம்னு சொன்னதும், ‘எப்படிப் பார்த்தாலும் ‘மா.பொ.சி.’ன்னு வருதே…’ன்னு சொன்னாங்க. பெருந்தலைவர்களை மதிப்பதுதான் பண்பாடு என்பதால், நாங்களும் கதைக்குப் பொருத்தமான தலைப்பாக ‘சார்’ என்ற தலைப்பை வைத்தோம்.
அந்தச் சமயத்துல ‘பி.டி.சார்’ன்னு ஒரு படம் வெளியானதால், அவங்ககிட்யேயே ‘நாங்க ‘சார்’னு டைட்டில் வச்சிருக்கோம்னு சொல்லி அவங்களோட அனுமதியையும் வாங்கின பிறகே ‘சார்’ டைட்டிலை அறிவித்தோம். தயாரிப்பாளர் சங்க வழக்கப்படி ஒரு படம் வெளியான சமயத்தில் அதே பெயரில் தலைப்புகள் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட படத்தினரிடம் நம் தலைப்புக்கான அனுமதி வாங்க வேண்டும் என்ற விதிமுறை இருக்கிறது. அதனாலேயே ‘பி.டி.சார்’ படக்குழுவினரிடம் அனுமதி வாங்கின பிறகே ‘சார்’ டைட்டிலை அறிவித்தோம். இப்போது டீசரும் வெளியாகிறது. சிவகுமார் சாரின் மகன் கார்த்தி சாரும், கார்த்திக் சுப்புராஜ் சாரும் டீசரை வெளியிடுகிறார்கள்!” என்கிறார் போஸ் வெங்கட்.