மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக தமிழக சட்டப்பேரவை நாளை கூடுகிறது

சென்னை: தமிழகத்தில் துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்காக, சட்டப்பேரவை நாளை கூடுகிறது.

சட்டப்பேரவையில் வழக்கமாக, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, துறை வாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளின் திட்டங்களுக்கு, பேரவை ஒப்புதலுடன் நிதி விடுவிக்கப்படும். சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம், மழை உள்ளிட்டபல்வேறு காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

உரை மீதான விவாதம் 15-ம் தேதிவரை நடந்தது. அன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தனது பதில் உரையை அளித்தார்.

அதைத் தொடர்ந்து, 19, 20-ம் தேதிகளில் தமிழக அரசின் பொது பட்ஜெட்,வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் 22-ம் தேதி வரை நடைபெற்றது.

தொடர்ந்து, துறைவாரியாக மானியகோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட வேண்டிய நிலையில், மக்களவை தேர்தல் அறிவிப்பை எதிர்நோக்கி, மீண்டும் கூடும் தேதி அறிவிக்காமல் பேரவை தள்ளிவைக்கப்பட்டது.

தேர்தல் நடைமுறைகள் முடிந்துள்ள நிலையில், மானிய கோரிக்கை விவாதங்களுக்காக சட்டப்பேரவை நாளை (ஜூன் 20) மீண்டும் கூடுகிறது. விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிஇடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், காலை, மாலை என இரு வேளையும் பேரவை கூட்டம் நடக்கிறது.

தமிழகத்தின் 39 மக்களவை தொகுதிகளையும் வெற்றி பெற்ற உத்வேகத்தில் ஆளும் திமுக உள்ளது. இதனால், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களின் விரிவாக்கம், புதிய திட்டம் தொடர்பான அறிவிப்புகள் இடம்பெறும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின்கீழ் பயனாளிகள் விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

ஜூலை 1 முதல் மின்கட்டணம் உயர்த்தப்படலாம் என தகவல் பரவி வரும்சூழலில், அதுபற்றிய முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என தெரிகிறது.

அதேநேரம், மின்கட்டணம், போதைப் பொருள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தரப்பு வலியுறுத்தும் என தெரிகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.