யமஹா இந்தியாவில் வெளியிட்டிருந்த 2 ஸ்ட்ரோக் ஆர்எக்ஸ்100 மோட்டார்சைக்கிளை மீண்டும் விற்பனைக்கு 4 ஸ்ட்ரோக் மாடலாக மாற்றி திரும்ப RX100 பைக்கினை கொண்டு வருவதற்கு சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ஆனால் எந்தளவுக்கு சாத்தியம் என்பதனை காலம்தான் பதில் சொல்லும் என யமஹா இந்தியா சேர்மேன் ஈஷீன் சிஹானா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து தினமும் RX100 எப்பொழுது வரும் என்ற கேள்வியை யமஹா எதிர்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ள சேர்மேன், பைக்கின் தோற்றம், பெர்ஃபாமென்ஸ் உள்ளிட்டவை சாத்தியமாக இருந்தாலும், ஆனால் அந்த ஐகானிக் ஆர்எக்ஸ்100 மாடலின் சத்தத்தை எவ்வாறு 4 ஸ்ட்ரோக்கில் மறு உருவாக்கம் செய்து என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளதாக குறிப்பிடுகின்றார்.
2 ஸ்ட்ரோக் பெற்ற 100சிசி பைக்கில் இருந்த அதே செயல்திறனை உருவாக்குவதில் சிரமம் என்றாலும் கூடுதல் சிசி வழங்கும் பொழுது சாத்தியப்படும் ஆனால், பழைய எக்ஸ்ஹாஸ்ட் ஒலியை சிதைக்காமல் கொண்டு வருவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. ஆனால், இதனை சாத்தியப்படுத்துவது மிகவும் சவாலாக இருக்கும் அதே நேரத்தில் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்க வேண்டியுள்ளது.
ஆனால் ஐகானிக் RX100 பெயரை எவ்விதத்திலும் சிதைக்காமல் புதிய ஆர்எக்ஸ் மாடலை உருவாக்கம் செய்வதற்கான வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது என்பது ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையில் மட்டும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“RX 100 உயர் செயல்திறன் மற்றும் பிரீமியம் பொருத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் யமஹா பிராண்ட் இமேஜை நிலைநிறுத்த உதவியது, மேலும் அந்த பிராண்டின் மீது எனக்கு முழு மரியாதை உண்டு, மேலும் அது மீண்டும் உயிர்ப்பிக்கப்படுமா” என்பதனை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சந்தைக்கு என பிரத்தியேகமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் யமஹா மோட்டார் கவனம் செலுத்த துவங்கியுள்ளது.