சென்னை: தமிழகத்தில் தனியார் மினி பேருந்துகளை இயக்குவது தொடர்பான புதிய வரைவு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 2,950மினி பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. இப்பேருந்துகளின் சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் புதிய விரிவான மினி பேருந்து திட்ட வரைவறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசிதழில் கூறப்பட்டிருப்பதாவது: தனியார் மினி பேருந்துகளுக்கு போக்குவரத்து சேவையில்லா இடங்களில் 17 கிமீ பயணிக்கவும் மற்றும் சேவை உள்ள இடங்களில் 4 கிமீ இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது, போக்குவரத்து சேவைஇருக்கும் இடங்களில் மேலும் 4 கிமீ கூடுதலாக இயக்க மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 100 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் பகுதிகளுக்கு பேருந்து சேவை கிடைக்கும்.
சென்னையின் உட்பகுதியில் மினி பேருந்துகள் இயக்க அனுமதிஇல்லை. இருப்பினும், பயணிகளின் தேவைக்கேற்ப திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மினி பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசீலனை செய்யலாம். புதிய மினி பேருந்து வரைவு திட்டம் குறித்து30 நாட்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும். இதையடுத்து, வரும் ஜூலை 22-ம் தேதி, சென்னை,தலைமைச் செயலகத்தில் உள்துறைச் செயலர் தலைமையில் காலை 11 மணிக்கு கருத்து கேட்புகூட்டம் நடத்தப்படும். இவ்வாறுஅரசிதழில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே.கொடியரசன் கூறியதாவது: மீண்டும் மினி பேருந்துகள் திட்டத்தை புதுப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி. இந்த அறிவிப்பையும், சென்னையின் சில பகுதிகளில் மினி பேருந்துகளை இயக்க அனுமதித்ததையும் முழு மனதோடு வரவேற்கிறோம்.
அதேநேரம், போக்குவரத்து சேவையில்லா இடங்களில் பயணிக்கும் தொலைவை மட்டும் 15 கிமீ ஆக அதிகரிக்க வேண்டும். பழைய மினி பேருந்துகளுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுமட்டுமின்றி, பெருங்குடியில் பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு பேருந்து நிலையம் இல்லை. எனவே, பேருந்து நிலையம் இருக்கும் திருவான்மியூர் வரை பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கவேண்டும். இதுபோன்ற மாற்றங்கள் மூலம் மினி பேருந்து திட்டத்தின் இலக்கை எட்ட முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.