இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஓலா எலக்ட்ரிக் தனது முதல் மோட்டார்சைக்கிளை FY25-26 ஆம் நிதியாண்டின் மத்தியில் அதாவது 2025 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் விற்பனைக்கு வெளியிடுவதனை தனது ஐபிஓ வெளியிட்டிற்காக தாக்கல் செய்துள்ள DRHP மூலம் தெரியவந்துள்ளது.
பொது பங்கு வெளியிட தயாராகி வருகின்ற ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இதன் மூலம் ரூ.5,500 கோடியை திரட்ட திட்டமிட்டிருக்கின்றது. ஓலா ஐபிஓ வெளியிடப்படும் பொழுது இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான ஐபிஓ ஆக விளங்கும், சமீபத்தில் நிஃப்டி EV மற்றும் நியூ ஏஜ் ஆட்டோமோட்டிவ் இண்டெக்ஸ் என்ற இண்டக்ஸை தேசிய பங்கு சந்தை துவங்கியுள்ளது.
ஓலா நிறுவனம் முன்பாக M1 டைமண்ட்ஹெட், M1 அட்வென்ச்சர், M1 சைபர்ரேசர் மற்றும் M1 க்ரூஸர் என நான்கு கான்செப்ட் நிலை மாடல்களை காட்சிப்படுத்தியிருந்த நிலையில், இந்த மாடல்களுக்கு தொழில்நுட்ப விபரங்களை வெளியிடவில்லை. இந்த மாடல்களில் ரோட்ஸ்டெர் முதலில் விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டின் இறுதியில் வெளியாகலாம்.
ஓலா எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல், மூன்று சக்கர வாகனங்களை தயாரிக்கவும் திட்டமிட்டு வருவதுடன் எதிர்காலத்தில் கார்களையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனத்தின் சொந்த முயற்சியிலான பேட்டரி செல்களை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆலையில் தயாரிப்பதனால் மிக சவாலான விலையில் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது.
ஓலா எலக்ட்ரிக் ஐபிஓ அடுத்த சில வாரங்களில் இந்திய பங்கு சந்தையில் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளது.