சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்று இரவும் பலத்த மழை பெய்தது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.
இரவு சுமார் 10 மணிக்கு மேலாக கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி, அசோக் நகர்,மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், அம்பத்தூர், நுங்கம்பாக்கம், அடையாறு, மயிலாப்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், மீனம்பாக்கம்,குன்றத்தூர், தாம்பரம், அனகாபுத்தூர் எனப் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக் காற்றுடன் பரவலாக மழை பெய்தது.
80 ஆண்டு பழமையான மரம்: ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பி-பிளாக் நுழைவு வாயில் அருகே 80 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த 20 அடி சுற்றளவு கொண்ட பழமையான ஆலமரம் முறிந்து விழுந்தது. மரத்தின் ஒரு பகுதி அருகில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலைய மதில் சுவரின் மேலே விழுந்தது. எனினும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
நேற்று காலை மரத்தை அகற்றும் பணி நடைபெற்றது. மருத்துவமனையின் முன் நுழைவு வாயில் அருகே மரம் விழுந்ததால் அந்த வழி மூடப்பட்டு, மாற்று வழியில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர்.
சின்னமலையில் இருந்து வேளச்சேரி செல்லும் சாலையில் இருந்த பழமைவாய்ந்த ராட்சத மரமும் முறிந்து விழுந்தது. இதனால் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சில வாகனங்கள் சேதமடைந்தன.
மேலும், தாழ்வான பகுதிகள், முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. அதேநேரம், நள்ளிரவில் சிறிது நேரம் மின்தடையும் ஏற்பட்டது. இதனால் தூக்கமின்றி மக்கள் அவதியடைந்தனர்.
நேற்று காலை வரை தமிழகத்திலேயே அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 12 செமீ மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக பூந்தமல்லியில் 11, பள்ளிக்கரணை, மீனம்பாக்கத்தில் தலா 7, பெருங்குடி, ஆலந்தூர், தாம்பரத்தில் தலா 6, அடையாறில் 5 செ.மீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
15 விமான சேவை பாதிப்பு: கனமழையால் துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், தோகாவில் இருந்து வந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம், அபுதாபியில் இருந்து வந்த எத்தியார்ட் ஏர்லைன்ஸ் விமானம், லண்டனில் இருந்து வந்த பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், புனேயில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், பிராங்பர்ட்டிலிருந்து வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆகிய 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தன.
அதில், துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மற்ற விமானங்கள் ஒரு மணி நேரத்துக்கு பின்னர் மழை நின்று வானிலை சீரானதும் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், பிராங்பர்ட், அபுதாபி, சார்ஜா,தோகா, துபாய், டெல்லி, அகமதாபாத் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.
2-வது நாளாக… சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவும் கனமழை வெளுத்து வாங்கியது. இரவு 9 மணியளவில் தொடங்கிய மழை, மெல்ல அதிகரித்து இரண்டு மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாமல் வெளுத்து வாங்கியது. சென்னை அண்ணா சாலை, கீழ்ப்பாக்கம், நுங்கம்பாக்கம், நந்தனம், அண்ணா நகர், வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
அதேபோல சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, ஆவடி, அம்பத்தூர், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வேலை முடித்து வீடு திரும்புவோர் பெரும் அவதிக்கு ஆளாகினர். அண்ணா சாலை, ஜிஎஸ்டி சாலை உள்ளிட்ட சாலைகளில் சில இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் பேஸ்புக் பக்கத்தில், “ஒரு மணி நேரத்தில் என்னவொரு மழை. திங்கட்கிழமை சென்னையின் மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்றால், செவ்வாய்க்கிழமை மத்திய மற்றும் வடசென்னையில் வெளுத்து வாங்குகிறது. திருவொற்றியூரில் 85 மி.மீ, அமிஞ்சிகரை – 65 மி.மீ, தேனாம்பேட்டை – 62, மணலி – 60, கொளத்தூர் – 60. புதன்கிழமை மீண்டும் சந்திப்போம். மிதமான மழையும் சாரலும் தொடரும்” என்று குறிப்பிட்டிருந்தார்.