USA v SA: அசத்திய அமெரிக்கா, ரபாடாவால் வென்ற தென்னாப்பிரிக்கா; சூப்பர் 8ல் முதல் போட்டியே த்ரில்லர்!

சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியே பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவுக்கும் டெஸ்ட் அந்தஸ்து பெறாத அமெரிக்காவுக்கும்தானே போட்டி, தென்னாப்பிரிக்கா எளிதில் வென்றுவிடும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், லீக் சுற்றைப் போலவே அமெரிக்கா இங்கும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

போட்டி கடைசி வரை ரொம்பவே சுவாரஸ்யமாகவே சென்றது. இறுதியில் கொஞ்சம் போராடி இழுத்துப் பிடித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வென்றது. காரணம், அமெரிக்க அணி அவ்வளவு எளிதாக போட்டியை விட்டுக் கொடுத்துவிடவில்லை.

“எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை. எங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கப்போவதில்லை என்பது எங்களுக்குத் தெரியும். பாகிஸ்தான் மீதுதான் அத்தனை அழுத்தமும் இருந்தது. இதுவே எங்களுக்குப் பெரிய பலம்தான்!”

SA v USA

லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய சமயத்தில் அமெரிக்க அணியின் மோனாங் படேல் இப்படிப் பேசியிருந்தார். இந்தக் கருத்து அப்படியே இந்தப் போட்டிக்கும் பொருந்திப் போகும். தென்னாப்பிரிக்கா மீதுதான் அத்தனை அழுத்தமும் இருந்தது. போட்டி கொஞ்சம் நெருக்கமாக சென்ற கடைசி சில ஓவர்களில் இதை உணரவும் முடிந்தது.

அமெரிக்க அணியின் கேப்டன் ஆரோன் ஜோன்ஸ்தான் டாஸை வென்று பந்துவீசப்போவதாக அறிவித்தார். பேட்டிங் பிட்ச் என்பதால் டார்கெட் என்னவென்று தெரிந்துவிட்டால் அதைத் திருப்பி அடித்துவிடலாம் என்பது அமெரிக்காவின் நம்பிக்கை. தென்னாப்பிரிக்கா பேட்டிங்கைத் தொடங்கியது.

மாஸ் ஹீரோ படங்களில் துணை கதாபாத்திரங்கள் எதற்கும் முக்கியத்துவம் கொடுக்காமல் ஹீரோவை மட்டுமே மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் திரைக்கதையைப் போல தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் மொத்தமும் டீகாக்கை மையப்படுத்தியதாகவே இருந்தது. முதல் ஒரு மணி நேரம் முழுவதும் டீகாக்கின் ராஜாங்கம்தான்.

De Kock

ஸ்பின்னர்கள், வேகங்கள் என எந்தப் பாரபட்சமும் இல்லாமல் அடித்து வெளுத்தார். ஓப்பன் கிரவுண்டாக இருப்பதால் காற்றும் ஒரு பக்கமாக வேகமாக வீசிக்கொண்டிருந்தது. அதையும் மனதில் வைத்துக் சரியான திசைகளில் ஷாட்களை ஆடி மிரட்டினார். ஜாஸ்தீப் சிங் என்கிற பௌலர் வீசிய ஒரே ஓவரில் 28 ரன்கள் வந்திருந்தன. காரணம், டீகாக்தான். அதேமாதிரி, கோரி ஆண்டர்சனின் ஒரு ஓவரில் 17 ரன்கள். டீகாக் க்ரீஸில் இருந்த வரை 6 ஓவர்களில் ஓவருக்கு 10 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வந்திருந்தன. இன்னொரு முனையில் மார்க்ரம் டீகாக்கு ஒத்துழைத்துக் கொண்டிருந்தார்.

13வது ஓவரில் ஸ்பின்னர் ஹர்மீத் சிங் வீசிய ஒரு புல் டாஸில் டீகாக் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே மில்லரையும் தானே கேட்ச் பிடித்து வெளியேற்றினார் ஹர்மீத் சிங். இந்த ஓவர் ஆட்டத்தின் திருப்புமுனை! 220 ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்காவின் ஸ்கோர் 200க்குள்ளாகவே சுருங்கியது. க்ளாசென், ஸ்டப்ஸ் இருந்தும் பெரிய அதிரடியை காண முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக பவுண்டரியும் சிக்ஸர்களும் வந்திருந்தன.

Klassen

சவுரப் நேத்ரவால்கர் 19வது ஓவரில் வெறும் 6 ரன்களை மட்டுமே கொடுத்து அசத்தினார். ஸ்ட்ப்ஸூக்கு ஒயிடு அவுட் சைட் தி ஆப் ஸ்டம்ப் லைனில் தொடர்ச்சியாக 4 டாட்களை வீசி அசத்தினார். தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களுக்கு தங்கள் ஆட்டத்தை முடித்தது.

அமெரிக்காவுக்கு இதுவுமே ஓர் இமாலய டார்கெட்தான். ஆனால், கனடாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே இப்படி ஒரு டார்கெட்டை சேஸ் செய்த அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது. பவர்ப்ளேயுமே கூட அவர்களுக்கு நன்றாகத்தான் அமைந்தது. 14 பந்துகளில் 24 ரன்களை ஸ்டீவன் டெய்லர் அடித்திருந்தார். பெரிய ஷாட்களை அநாயசமாக அடித்திருந்தார். ஆனாலும் ரபாடாவின் பந்தில் இன்னொரு பெரிய ஷாட்டுக்கு முயலும்போது கேட்ச் ஆகி அவுட் ஆனார். பவர்ப்ளேக்குள்ளேயே நிதிஷ் குமாரின் விக்கெட்டையும் ரபாடா எடுத்துக் கொடுத்தார்.

Rabada

அடுத்த சில ஓவர்கள் அமெரிக்காவுக்கு அதிர்ச்சி மட்டுமே காத்திருந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. அமெரிக்க கேப்டனும் அதிரடி வீரருமான ஆரோன் ஜோன்ஸ் கேசவ் மகாராஜின் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கொடுத்து டக் அவுட் ஆனார். கோரி ஆண்டர்சன் நோர்க்கியாவின் அதிரடியான யார்க்கர் லெந்த் டெலிவரியில் ஸ்டம்பைப் பறிகொடுத்தார். வேகமாக 5 விக்கெட்டுகள் விழுந்தன.

தென்னாப்பிரிக்கா எளிதில் வெல்வதைப் போலத் தெரிந்தது. இங்கேதான் கோஸ் ட்விஸ்ட் கொடுத்தார். ஓப்பனிங் இறங்கியவர் அப்போதுதான் கதைக்குள்ளேயே எண்ட்ரி ஆனார். விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருக்கையில் இடையில் ஒரு சில பவுண்டரிகளை அடித்து செட்டில் ஆனவருக்கு ஹர்மீத் சிங் திடீர் ஆதரவு அளித்தார். இரண்டு பேரும் மாறி மாறி பந்துகளை பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் அடித்து போட்டியை சுவாரஸ்யப்படுத்தினார்.

நோர்கியாவின் ஒரே ஓவரில் 19 ரன்கள் வந்திருந்தன. ஷம்சியின் 18வது ஓவரில் 22 ரன்கள் வந்திருந்தன. கோஸூம் ஹர்மீத்தும் கிளீன் ஹிட்களாக சிக்ஸர்களைப் பறக்கவிட்டனர். கடைசி 2 ஓவர்களில் 28 ரன்கள் தேவை. போட்டிப் பரபரப்பானது.

Gous & Harmeet

ரபாடா பந்தை கையில் எடுத்தார். 19வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்ஸருக்கு முயன்று பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார் ஹர்மீத். புதிதாக க்ரீஸூக்குள் வந்த ஜாஸ்தீப் சிங்கே இந்த ஓவரில் நான்கு பந்துகளை விழுங்க, போட்டி அமெரிக்காவின் கையைவிட்டு சென்றது. கோஸ் 80 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தும் அமெரிக்கா 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. ரபாடாவின் ஓவர்கள் மட்டும்தான் தென்னாப்பிரிக்காவைத் தோல்வியிலிருந்து தப்பிக்க வைத்ததென்றால் மிகையில்லை.

அமெரிக்கா தோற்றிருந்தாலும் இயன்றளவு போராடியது. நெருங்கி வந்து தோற்று ரன்ரேட்டுக்கும் பங்கம் இல்லாமல் பார்த்துக் கொண்டது. இந்த குரூப்பில் அமெரிக்கா எதோ ஒரு பெரிய அப்செட்டை நிகழ்த்த அதிக வாய்ப்பிருக்கிறது. உடையப்போகும் பர்னிச்சர் எதுவென்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.