கள்ளச்சாராய மரணம்: “கள்ளக்குறிச்சி விரைகிறேன்!" – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29-ஆக அதிகரித்திருக்கும் நிலையில், 94 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவரிகளில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. இது தொடர்பான விசாரணையில், பாக்கெட்‌ சாராயம்‌ விற்ற கோவிந்தராஜ்‌ என்கிற கண்ணுகுட்டி (49) கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

ஸ்டாலின்

இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தைப் பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29-ஆக உயர்ந்துள்ள செய்தி கேட்டு பேரதிர்ச்சி அடைந்தேன்.

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூடும் நிலையில், மரபுப்படி மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் உட்பட பலருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து நிறைவேற்றப்படும். மறைந்தோர்க்கு அ.தி.மு.க சார்பில் இரங்கலைப் பதிவுசெய்கிறேன். ஆனால், இந்தச் சூழலில், இந்த விடியா தி.மு.க அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத் தோல்வியாலும், மெத்தனப் போக்காலும் பரிதாபமாக உயிரிழந்தோரின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து அவர்களின் சொல்லொண்ணா துயரில் பங்குகொள்வதே பிரதானமாக அமைகிறது.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மேலும் இறப்புக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இறந்தவர்கள் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்து கொள்வதுடன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோர் குடும்பத்தாரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்க தற்போது கள்ளக்குறிச்சி விரைகிறேன்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.