மிஸ்டர் கழுகு: தேசிய நிர்வாகி Vs சர்ச்சைத் தலைவர் `முதல்' ரேங்க் கார்டுடன் தயாராகும் எடப்பாடி வரை!

மலர்க் கட்சியில் சர்ச்சைத் தலைவருக்கும், முன்னாள் பெண் தலைவருக்குமான பிரச்னை அண்மையில்தான் பைசல் ஆனது. அதற்குள் அந்தக் கட்சியில் அடுத்த பிரச்னை ஆரம்பமாகிவிட்டது. தேசியப் பொறுப்பில் இருக்கும் கொங்கு சீனியர் பெண் நிர்வாகி, எப்படியாவது மாநிலப் பொறுப்புக்கு வந்துவிட வேண்டும் என முட்டி மோதுகிறாராம். இதனால் தொடர்ந்து மாநிலத் தலைமைக்கு எதிராகச் செயல்பட்டுவருபவர், சமீபத்தில் கட்சிக் கட்டுப்பாட்டையும் மீறி, விமான நிலையத்தில் கொடுத்த பேட்டி கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் அதைப் பற்றிக் கண்டுகொள்ளாதவர், அடுத்த நாளும் செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். இதனால் கடுப்பான சர்ச்சைத் தலைவர், அம்மணியிடம் ‘பேட்டியைத் தவிர்த்துவிடுங்கள்’ என அன்பாக எச்சரித்திருக்கிறார். இதையடுத்து ‘செய்தியாளர்கள் சந்திப்பு இருக்காது’ எனச் சொல்லப்பட்டது. ஆனாலும் அசராத அம்மணி, தான் சொன்னபடி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி முடித்துவிட்டார். மோதல் முற்றிக்கொண்டே செல்வதால், “முன்னாள் மாநிலத் தலைவருடனான பஞ்சாயத்தை டெல்லி தலையிட்டு முடித்து வைத்ததுபோல, இதற்கும் ஒரு எண்ட் கார்டு போட வேண்டும்” என எதிர்பார்க்கிறார்கள் கமலாலய சீனியர்கள்!

தேர்தல் தோல்வி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்த விமர்சனங்களைச் சரிக்கட்ட சட்டமன்றத்தில் திறம்பட களமாடத் திட்டமிட்டிருக்கிறதாம் அ.தி.மு.க. அதற்காக கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் விரைவிலேயே நடக்கவிருக்கிறதாம். அதில், ‘சட்டமன்றத்தில் எந்தெந்த விவகாரங்கள் குறித்து, யார் யார் பேசுவது, எதையெல்லாம் விவாதமாக்குவது’ என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டவிருக்கிறதாம்.

எடப்பாடி பழனிசாமி

அதேபோல, முன்னாள் அமைச்சர்களுக்குத் தங்களின் துறை சார்ந்து கேள்விகளைத் தயார் செய்ய ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருக்கிறதாம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ரேங்க் கார்டையும் வாசித்துக்காட்டவிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. குறிப்பாக தென்மாவட்டத்திலுள்ள அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்மீது கடும் அதிருப்தியில் இருக்கும் எடப்பாடி, சிலரைக் கடுமையாக வசைபாடவும் வாய்ப்பிருப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள் எம்.ஜி.ஆர் மாளிகை வட்டாரத்தில்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் இடைத்தேர்தல் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஆனால், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் மட்டும் கலந்துகொள்ளவில்லை. “தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான காங்கிரஸ் தலைவராக ராஜேஷ்குமாரை அறிவித்ததில் பெருந்தகைக்கு உடன்பாடு இல்லை. எனவே தொடர்ந்து அவரோடு மோதல் போக்கைக் கடைப்பிடிக்கிறார்.

செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார்

அதனால்தான் பணிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துவிட்டார் ராஜேஷ்குமார்” என்கின்றனர் சீனியர்கள். ஆனால் ராஜேஷ்குமார் தரப்போ, “பணிக்குழுக் கூட்டத்துக்கு அண்ணனுக்கு அழைப்பே இல்லை. பிறகு எப்படிப் பங்கேற்பார்?” எனப் பொங்குகின்றனர். அதேசமயம், பெருந்தகை தரப்பினரோ, “தலைமையிலிருந்து அழைப்பு சென்றது. ஆனால், ‘ராகுல் காந்தி பிறந்தநாள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டில் இருப்பதால், தன்னால் கலந்துகொள்ள முடியாது’ என ராஜேஷ்குமார்தான் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்த்தார். இப்போது அழைப்பில்லை என தலைமைமீது பழிபோடப் பார்க்கிறார்” என்று நறநறக்கிறார்கள். “இந்த ஈகோ யுத்தம் இத்தோடு நிற்கப்போவதில்லை. சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும்போது மீண்டும் வெடிக்கும்” என்கிறார்கள் கதர்ச் சட்டையினர்.

தலைநகர் வீதிகளில் சுற்றித்திரியும் நாய், மாடுகளால் ஏற்படும் பிரச்னைகள் பெரிதாகிக்கொண்டேயிருக்கின்றன. விவகாரத்தைக் கையாள முடியாமல் திணறுகிறாராம் மாநகரப் பெண் நிர்வாகி. தலைநகரின் எந்தப் பிரச்னையென்றாலும், முந்தி வந்து கேமராவுக்குப் பேட்டி கொடுக்கும் மாண்புமிகுவிடம், “ஏதாவது உதவி செய்யுங்க… நான் சொன்னாலும் அதிகாரிங்க கேட்க மாட்டேங்கறாங்க. நீங்க அழைச்சு, உங்க ஸ்டைல்ல சத்தம் போடுங்க” என வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார் பெண் நிர்வாகி. அதற்கு, “ஏம்மா, இன்னொருத்தர் டிபார்ட்மென்ட்டுல நான் எப்பிடிம்மா தலையிட முடியும்… இது உன் பிரச்னை… நீதான் சரி செய்யணும்” எனக் கைவிரித்துவிட்டாராம் மாண்புமிகு. ‘மேலிடத்துகிட்ட நல்ல பெயர் எடுக்குற விஷயத்துல மட்டும் முந்திக்கிட்டு வந்து பேட்டி கொடுக்குறாரு. சமாளிக்க முடியாத பிரச்னையையெல்லாம் கண்டுக்கவே மாட்டேங்கிறாரு…’ எனப் புலம்பித் தீர்க்கிறாராம் மாநகரப் பெண் நிர்வாகி.

தி.மு.க முப்பெரும் விழாவுக்குச் சென்றிருந்த அமைச்சர்கள் பலரும் குஷி மூடிலேயே இருந்திருக்கிறார்கள். ’40-க்கு 40 வெற்றியால், இப்போதைக்கு அமைச்சரவை மாற்றமோ, மா.செ-க்கள் மாற்றமோ இருக்காது’ என்கிற தகவலால் பலரது முகத்திலும் பிரகாசம் தெரிந்தது.

இதில் அமைச்சர்கள் சற்று இளைப்பாறினாலும், பதவியை எதிர்பார்த்து ஏமாந்துபோனவர்கள் ஏராளம். விழாவுக்கு வந்திருந்த மேலிடத்து மாப்பிள்ளையிடம் புலம்பவும் வத்திவைக்கவும் ஒரு கூட்டம் காத்திருந்தது. இப்படியெல்லாம் ஒரு கூட்டம் தன்னிடம் வரும் என்பதை அறிந்துகொண்டதாலோ என்னவோ, யாரிடமும் சிக்காமல், வந்துபோன சுவடுகூடத் தெரியாமல் கிளம்பிவிட்டாராம் மாப்பிள்ளை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.