மலையக இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு “நாம் 200” என்ற விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாகவும், அந்த தேசிய வேலைத்திட்டத்திற்குள் மலையக இளைஞர் மாநாடு ஒன்று ஜூன் 22ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
பெருந்தோட்டங்களில் வாழும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்படுவதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.