கம்பீர் தலைமை பயிற்சியாளர்… அப்போ இவர்கள் தான் பௌலிங் கோச் – ஐடியா கொடுத்த பாக். வீரர்!

Indian Cricket Team Head Coach: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் (ICC T20 World Cup 2024) குருப் சுற்று போட்டிகள் நிறைவடைந்து, சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது. இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் விளையாட உள்ளது. இந்த சுற்றில் ஆப்கன், வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளை இந்தியா சந்திக்க உள்ளது. வரும் ஜூன் 29ஆம் தேதியுடன் டி20 உலகக் கோப்பை நிறைவடைய உள்ளது. 

குறிப்பாக, இந்த முறை இந்திய அணி (Team India) கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 2013க்கு பின்னர் இந்திய அணி ஐசிசி கோப்பையை கைப்பற்றாதது ஒரு காரணம் என்றாலும், ராகுல் டிராவிட்டுக்கு தலைமை பயிற்சியாளராக  இதுதான் கடைசி தொடராகும். அதன்பின் இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளார். 

இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கௌதம் கம்பீர், WV ராமன் மற்றும் மற்றொருவரும் விண்ணப்பித்துள்ளனர். அனைவரிடமும் நேர்காணல் நடைபெற்று முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின் கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. அந்த வகையில், தலைமை பயிற்சியாளர் மட்டுமின்றி பயிற்சியாளர் குழுவே மொத்தமாக மாறுபடும்.

இப்போது ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக உள்ள நிலையில், விக்ரம் ரத்தோர் பேட்டிங் பயிற்சியாளராகவும், பரஸ் மாம்ப்ரே பந்துவீச்சு பயிற்சியாளராகவும், திலீப் பீல்டிங் பயிற்சியாளராகவும் உள்ளனர். கௌதம் தலைமை பயிற்சியாளராக வரும் போது யார் பந்துவீச்சுக்கும், பீல்டிங்கிற்கும் பயிற்சியாளர்களாக வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த வகையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் கூறுகையில்,”இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் தேவையில்லை. அவர்களுக்கு ஏராளமான ஆப்ஷன்களும் திறமைகளும் உள்ளன. டிராவிட்டிற்கு பிறகு கெளதம் கம்பீரை விட சிறந்தவராக யாரும் இருக்க முடியாது. பெரிய வீரராக இருந்த அவர் சிறந்த பயிற்சியாளராகவும் மாறுவார். இந்தியாவுக்கு இப்போது இருக்கும் சிறந்த வாய்ப்பு கௌதம் கம்பீர்தான்.

ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக கௌதம் கம்பீர் இருந்தார். அவர் இருக்கும் வரை அந்த அணி சிறப்பாக விளையாடியது. அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக மாறினார். அந்த அணி சாம்பியனானது. அவர் திட்டமிடுவதில் அற்புதமானவர், கிரிக்கெட் சார்ந்து நல்ல மனநிலையை கொண்டவர். 

அவருடன் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். நாங்கள் நீண்ட காலமாக தொடர்பில் இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக விளையாடினோம், உணவு சாப்பிட்டிருக்கிறோம், அரட்டையடித்திருக்கிறோம். நாங்கள் இன்னும் நல்ல நண்பர்கள். நாங்கள் இன்னும் தொடர்பில்தான் இருக்கிறோம். அவர்தான் இந்திய அணிக்கு சிறந்த பயிற்சியாளராக இருப்பார், அவர் தலைமை பயிற்சியாளராக இருக்க வேண்டும். பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா அல்லது ஜாகீர் கானை இந்தியா தேர்வு செய்யலாம்” என்றார். இதனால், ரசிகர்களும் இவர்களையே இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர்களாக நியமிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | இந்திய அணிக்கு சாதகமாக சூப்பர் 8 சுற்று போட்டிகளை ஏற்பாடு செய்த ஐசிசி – இந்த வெற்றி தேவையா?
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.