விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் எம்எல்ஏ-வாக இருந்த நா.புகழேந்தி சமீபத்தில் மறைந்தார். இதையடுத்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் (ஜூன் 20) நிறைவு பெறுகிறது. வரும் 24-ம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 26-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. தொடர்ந்து ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலை பொறுத்தவரை, திமுக, பாமக, நாதக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில், வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தச் சூழலில், விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியது: “விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பொதுப் பார்வைாளராக ஐஏஎஸ் அதிகாரி அமித் சிங் பன்சலும், செலவின பார்வையாளராக ஐஆர்எஸ் அதிகாரி மனிஷ்குமார் மீனாவும், காவல்துறை பார்வையாளராக ஐபிஎஸ் அதிகாரி அஜய் குமார் பாண்டேவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் 1,324 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். இந்தத் தொகுதியில் 9 வாக்குச்சாவடிகள பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

எந்த விரலில் ‘மை’ வைப்பது? – மேலும், சமீபத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுற்ற நிலையில், அந்த தேர்தலுக்காக இடதுகை ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்ட ‘மை’ இன்னும் பலரது விரல்களில் அழியவில்லை. இந்நிலையில், இடைத்தேர்தலில் எந்த விரலில் ‘மை’ வைக்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையம் தகவல் அளித்ததும், இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.