புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வெப்ப அலையின் தாக்கத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வீடற்ற நிலையில் சாலையில் வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 192 பேர் கடந்த 9 நாட்களில் உயிரிழந்துள்ளதாக தன்னார்வ தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஹோலிஸ்டிக் டெலவப்மெண்ட் மையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வட மாநிலங்களில் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. குறிப்பாக, டெல்லியில் வெப்ப அலையின் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள வீடற்ற குடும்பங்கள் தற்காலிகமாக சாலை ஓரங்களில் தங்கி தங்களது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அதுபோன்றவர்களை இந்த வெப்ப அலையின் தாக்கம் கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கடந்த 9 நாட்களில் மட்டும் கடும் வெயிலுக்கு 192 பேர் பலியானது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த 192 மரணங்கள் ஜூன் 11 முதல் 19-க்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்தவை. இறந்தவர்களின் உரிமை கோரப்படாத உடல்களில் 80 சதவீதம் வீடற்றவர்கள் பிரிவை சேர்ந்ததாக உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே வெப்ப அலை தாக்கத்திலிருந்து தப்பிக்க டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் சில ஆலோசனைகளை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. அதில், தொடர்ந்து அதிக நீரை பருகுதல், தளர்வான பருத்தி ஆடைகளை அணிதல், நண்பகல் 12 முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்த்தல், தொப்பி, குடைகளை பயன்படுத்துதல், நீர்ச்சத்து உணவுகளை அதிகம் உட்கொள்ளுதல் உள்ளிட்ட பல முக்கிய அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.