கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றுவரை 40-ஆக இருந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் இது தொடர்பாக விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயத்திலேயே 50-ஆக உயர்ந்தது. இதில், உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா ரூ.50,000-மும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த சம்பவத்தால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நிவாரணங்களை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.
சட்டமன்றத்தில் இது குறித்து உரையாற்றிய ஸ்டாலின், “வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அனைவருக்கும் வேதனையளித்துள்ள இந்த துயர சம்பவத்துக்கு பொறுப்பாளர்கள் மீது உறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநிலத்திலுள்ள அனைத்து மெத்தனால் உற்பத்தியாளர்கள், பயனர்கள், மெத்தனால் வைத்திருப்பதற்கான மற்றும் பயன்படுத்துவதற்கான உரிமம் பெற்ற தொழிற்சாலை போன்றவற்றை தணிக்கை செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள்மீது இதுவரை 4,63,710 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 4,61,084 பேர் கைதுசெய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சியில் மட்டும் 14,606 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 10,154 குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். 58 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.
இப்படி கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவரும் சூழலில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவது வேதனைக்குரியது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். அதனடிப்படையில் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக அளிக்கப்படும்…
*பெற்றோர் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்களுக்கு 18 வயது நிறைவடையும் வரை ஒவ்வொரு மாதமும் மாத பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5,000 வழங்கப்படும்.
*பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரணத்திலிருந்து நிலையான வைப்புத்தொகை வைக்கப்படும். அவர்களுக்கு 18 வயது நிறைவடைந்தவுடன் வட்டியோடு அந்தத் தொகை வழங்கப்படும்.
*பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரணத்திலிருந்து வழங்கப்படும்.
*பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களிலும் முன்னுரிமை அளிக்கப்படும்.
*பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர்களின் விருப்பத்தின்பேரில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர்” என்று அறிவித்தார்.