புதுடெல்லி: நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
சத்தீஸ்கரில் போராட்டம்: சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அம்மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபேஷ் பெகல் கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பூபேஷ் பெகல், மத்திய அரசு நடத்திய நீட் தேர்வில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது. பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. மோடி அரசில் அதிகரித்து வரும் ஊழலால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. வினாத்தாள் கசிவைத் தடுப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
உத்தரப் பிரதேசத்தில் போராட்டம்: உத்தரப் பிரதேசத்தில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அப்போது, போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, மத்திய அரசுக்கு எதிராகவும், உத்தரப் பிரதேச அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியினர் கோஷங்களை எழுப்பினர்.
பிஹாரில் போராட்டம்: பிஹாரில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகிலேஷ் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சிக் கொடியை கைகளில் ஏந்திய வண்ணம் அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மோடி அரசு வினாத்தாளை கசியச் செய்யும் அரசாக இருப்பதாகவும், இளைஞர்களின் எதிர்காலத்துடன் அது விளையாடுவதாகவும் குற்றம் சாட்டினர்.
ஜார்க்கண்ட்டில் போராட்டம்: ஜார்க்கண்ட்டில் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் தலைமையில் நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாணவர் காங்கிரஸ் பிரதிநிதிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்த அவர்கள், எந்த விலை கொடுத்தேனும் மாணவர்களுக்கு நீதியை பெற்றுத் தருவோம் என உறுதிபட கூறினர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் போராட்டம்: அருணாச்சலப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தில் நீட் தேர்வு முறைகேடுக்குப் பொறுப்பேற்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிபுராவில் ஆர்ப்பாட்டம்: திரிபுராவில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு போராட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் கொடியை கைகளில் ஏந்தியவாறும், நீட் எதிர்ப்பு பேனரை பிடித்தவாறும் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். அப்போது, நீட் முறைகேட்டைக் கண்டித்தும், மத்திய அரசைக் கண்டித்தும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மோடி அரசில் வினாத்தாள் கசிவு ஊழல் அதிகரித்த வண்ணம் இருப்பதாகவும், இது இளைஞர்களின் வாழ்வை இருட்டில் தள்ளுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். காங்கிரஸ் கட்சி மாணவர்கள் பக்கம் நிற்பதாகவும், அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர தொடர்ந்து பாடுபடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
நாகலாந்தில் போராட்டம்: நாகலாந்து பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளை மோடி அரசு நசுக்கிவிட்டதாகவும், இதுபோன்ற அநீதி தொடர அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் நீட் எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன.