நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘லக்’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து தமிழில் ஏழாம் அறிவு, சிங்கம், 3, பூஜை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன். அவரது நடிப்பில் கடைசியாக ‘சலார்’ படம் வெளியானது. அதன் பிறகு லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘இனிமேல்’ என்ற ஆல்பத்தில் நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து ‘டகோயிட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பான் – இந்திய ஆக்ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை ஷனில் டியோ இயக்குகிறார். ஸ்ருதி ஹாசனுக்கு ஜோடியாக ஆத்வி சேஷ் இப்படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘Ask Me Anything’ என்று பதிவிட்டு ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்திருக்கிறார்.
அப்போது ரசிகர் ஒருவர் ‘தென்னிந்திய உச்சரிப்பில் எதாவது சொல்லுங்கள்’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ஸ்ருதி ஹாசன், “உங்களின் இந்த மாதிரியான துல்லிய இனவாத செயல்கள் சரியான விஷயம் கிடையாது. இட்லி,தோசை, சாம்பார் என்று தென்னிந்தியர்களை அழைப்பதும் சரியான விஷயம் கிடையாது.
நீங்கள் எங்களைப் போன்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் அது வேடிக்கையாக இருக்கிறது” என்று காட்டமாக பதிலளித்திருக்கிறார். ஸ்ருதி ஹாசனின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்பானி வீட்டு திருமண விழாவில் நடிகர் ஷாருக் கான், நடிகர் ராம் சரணை `இட்லி, வடை, சாம்பார்’ என அழைத்தது சர்ச்சையை கிளப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.