புதுடெல்லி: நீட் தேர்வை புதிதாக நடத்தக் கோரும் மனு மீது பதிலளிக்க தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் பிற முறைகேடுகள் காரணமாக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் புனிதம் குலைந்துள்ளதால், புதிதாக மீண்டும் நீட் தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி. பாட்டி அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, புதிதாக மீண்டும் நீட் தேர்வு நடத்தக் கோரும் மனு மீது பதில் அளிக்க தேசிய தேர்வு முகமைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், நீட் கவுன்சிலிங் செயல்முறையை ஒத்திவைக்க வேண்டாம் என்றும் அது கூறியுள்ளது.
“கவுன்சிலிங் என்பது ஒரு செயல்முறை. இது ஜூலை 6 முதல் தொடங்குகிறது. இது ஒரு வார காலம் நடக்கும். இதற்கிடையில், விண்ணப்பதாரர்களுக்கு பல விருப்பங்கள் உள்ளன” என நீதிபதி பாட்டி, மனுதாரருக்குத் தெரிவித்தார்.
நீட் தேர்வு முறைகேடு புகார்கள் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுக்கள் மீது பதிலளிக்கவும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, நீட் தேர்வை நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும் என மனுதாரர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, நேற்றைய வாதத்தின்போது, கருணை மதிப்பெண்கள் பெற்ற 1,563 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. ஆனால், சட்டப்படி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வை நடத்த முடியும் என்பதால், தேசிய தேர்வு முகமை நடத்தும் மறு தேர்வு சட்டப்படி செல்லுமா என்ற கேள்வியை வழக்கறிஞர் ஒருவர் எழுப்பியுள்ளார்.
மேலும், 1563 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட விவகாரத்தில், இந்த எண் எவ்வாறு முடிவு செய்யப்பட்டது? கருணை மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியல் பொதுவெளியில் வெளியிடப்படாதது ஏன் என்ற கேள்விகளை எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஒருவர், மறு தேர்வு நடத்த அரசு குழு அமைத்ததையும், அந்த குழு மறு தேர்வு நடத்த பரிந்துரைத்ததையும் கேள்விக்கு உட்படுத்தி உள்ளார்.
நீட் தேர்வில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து விசாரிக்க சுதந்திரமான குழுவை உச்ச நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பலர் மனு தாக்கள் செய்துள்ளனர். முன்னதாக, இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வை நடத்துவதில் 0.001% அலட்சியம் கூட இருக்கக் கூடாது என தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.