• காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் வெளிநாட்டு நிதிக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை.
• சூழல் சார் வர்த்தகத் திட்டங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் நிதியைப் பெற்றுக்கொள்ள வெப்பமண்டல நாடுகள் செயற்பட வேண்டும் – 1st WLI Asia Oceania Conference 2024 உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு.
சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதன் மூலம் சூழல் சார் சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக வெளிநாட்டு நிதிக்காக காத்திருப்பதில் பயனில்லை என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெப்பமண்டல நாடுகள் சுற்றாடல் தொடர்பான வர்த்தகத் திட்டங்களில் கவனம் செலுத்தி தமக்குத் தேவையான நிதியை பெற்றுக்கொள்ள செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (20) பத்தரமுல்லை வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்ற ‘WLI Asia Oceania Conference 2024’ நிறைவு விழாவில் கலந்தகொண்டு இதனைக் குறிப்பிட்டார்.
சதுப்பு நிலங்களின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான முகாமைத்துவம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில், வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாடு ஜூன் 17 முதல் 21 வரை பத்தரமுல்லை தியசரு பூங்காவில் நடைபெற்றது.
“சூழல்நேய சுற்றுலாத் துறைக்கான சதுப்பு நிலங்கள் மற்றும் சதுப்பு நில மையங்கள்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மாநாட்டில், இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், கொரியா, மொங்கோலியா, பிலிப்பைன்ஸ், ஜோர்டான், மியன்மார், நியூசிலாந்து, ஜப்பான், அவுஸ்திரேலியா, சீனா, தாய்வான், ஐக்கிய இராச்சியம் ஆகிய 15 நாடுகளில் உள்ள 70 இற்கும் மேற்பட்ட சதுப்பு நிலப் பூங்காக்களில் இருந்து சுமார் 100 சர்வதேச சதுப்பு நிலப் பூங்கா பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
உலகின் முதல் நகர்ப்புற சதுப்பு நில பெருநகரமான கொழும்பு நகரைச் சுற்றியுள்ள சதுப்பு நிலங்களை 03 நாட்கள் கண்காணித்து ஆய்வு செய்யும் வாய்ப்பை இந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வழங்கியமை இதன் சிறப்பம்சமாகும்.
இங்கு, ரெம்சார் ஒன்றியத்தின் கிழக்காசிய பிராந்திய மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சு சென்ங் ஓஹ், (Suh Seung Oh) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசையொன்றையும் வழங்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
‘’சர்வதேச சதுப்பு நிலங்கள் ஒன்றியத்தின் முதல் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கிடைத்தமையை அதிஷ்டமாகக் கருதுகிறேன். சதுப்பு நிலங்கள், யானைகள் மற்றும் பிற விலங்குகள் இன்று பூமியில் அழிந்து வருகின்றன.
அபிவிருத்தி மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பால் இன்று நாடு முழுவதும் சதுப்புநிலங்கள் குறைந்து வருகின்றன. எனவே இவற்றைப் பாதுகாப்பதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அதற்காக அனைவரும் பொதுவான இலக்குடன் ஒன்றாகப் பணியாற்ற வேண்டும்.
சுமார் 500 ஆண்டுகள் பின்நோக்கிப் பார்த்தால், இன்று நாம் இருக்கும் இந்த இடமும் அதைச் சுற்றியுள்ள பகுதியும் சதுப்பு நிலங்களால் சூழப்பட்டிருந்தது. ஆனால் படிப்படியாக அது எவ்வாறு நிரப்பப்பட்டு வந்தது என்பதைக் கண்டோம். இந்த சதுப்பு நிலங்களை நாம் பாதுகாக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் அதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் இந்த தியசரு பூங்காவும் ஒன்று என்று குறிப்பிடலாம்.
தற்போது தென் மாகாணத்தில் 1000 ஏக்கருக்கும் அதிகமான சதுப்பு நிலத்தை சுற்றுலாத் தலமாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். எதிர்காலத்தில் அக்குரல பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலங்களின் மற்றுமொரு பகுதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் கீழ் இந்த நாட்டின் சதுப்பு நிலக் கட்டமைப்பு பாதுகாக்கப்படும் என நான் நம்புகிறேன். இதன் மூலம், நாட்டில் சூழல்நேய சுற்றுலா வர்த்தகம் உருவாக்கப்படும்.
ஹோர்டன் பிளேஸை அண்மித்து சுற்றுலா வலயம் ஒன்றை உருவாக்க நாம் மேலும் 1000 ஏக்கர்களை ஒதுக்கி உள்ளோம். எனவே, சதுப்பு நிலப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் சூழல் சார் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இலங்கை உறுதிபூண்டுள்ளது. சூழல் கட்டமைப்பு மற்றும் (mangroves) கடற்தாவரங்களைப் பாதுகாப்பதற்கான வெப்பமண்டல முயற்சிகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். குறிப்பாக காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இது ஒரு முக்கியமான காரணியாகிறது.
அமேசான் சுற்றுச்சூழல் அமைப்பு இன்று மறைந்து வருகிறது. இவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். சதுப்பு நிலங்கள், காடுகள், புல்வெளிகள், இவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டும். வர்த்தகத்திற்காக அல்ல, சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு பகுதியாக இது எவ்வளவு வர்த்தக மதிப்பைக் கொண்டிருக்கக்கூடும் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
ஆனால் இதற்கான நிதி வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த பணம் தற்போது பெரும்பாலும் உக்ரைன் அல்லது காசா பகுதிக்கு செல்கிறது. ஆனால் அது அத்துடன் முடிவதில்லை. எனவே நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும்.
அதன்போது, சுற்றாடல் தொடர்பான வர்த்தக திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். இந்து சமுத்திரத்தில் கார்பன் உறிஞ்சும் பகுதியாக வகிக்கக்கூடிய பங்கையும் நாங்கள் பார்க்கிறோம். இந்தப் பகுதிகளை சாதாரண அபிவிருத்திற்காக அல்லாமல் சுற்றாடல் பாதுகாப்பிற்காக இந்தப் பகுதியை வணிகமயமாக்குவது எப்படி என்பதை நாம் கண்டறிய வேண்டும். பசுமை நிதியியல் மற்றும் பசுமைப் பொருளாதாரத்திற்கு அவசியமான நிதியைப் பெற்றுக்கொள்வதில் குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.
இன்று, வெப்பமண்டல பகுதி கடுமையான சுற்றுச்சூழல் அச்சுறுத்தலில் உள்ளது. அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கு நிதியைப் எதிர்பார்த்து பயனில்லை. எனவே, சுற்றுச்சூழலையும் வெப்ப மண்டலத்தையும் பாதுகாக்க வர்த்தக ரீதியாக சாத்தியமான திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கை அரசாங்கம் தற்போது சர்வதேச காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவது தொடர்பான சட்டத்தை உருவாக்கி வருகிறது. ஆசியாவிலேயே முதன்முறையாக இதுபோன்ற பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகின்றது. மேலும் இது உலகின் பிற காலநிலை மாற்ற மையங்களுடன் இணைக்கப்படும்.
காலநிலை மாற்றக் கல்வி மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பிற்கான மையமாக இந்தப் பல்கலைக்கழகம் செயல்படும், மேலும் எவருக்கும் குறுகிய கால பயிற்சி அல்லது பட்டப் பின் படிப்புகளுக்கான வாய்ப்புகளை இது வழங்கும். எதிர்வரும் ஆண்டுகளில் இந்த நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் குறிப்பிட்டு, இந்த மாநாட்டை இன்று ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’’ என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
ரெம்சார் ஒன்றியத்தின் கிழக்காசிய பிராந்திய மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சு சென்ங் ஓஹ், (Suh Seung Oh),
‘’இந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் எனது மரியாதைக்குரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த நான்கு நாட்களாக சதுப்பு நிலங்கள் தொடர்பான பல விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம், கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்.
இந்த மாநாடு சதுப்புநில மையங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கு உதவியது மட்டுமல்லாமல் ஆசியா மற்றும் ஓசயனியா கண்டங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தியது.
முதன்முறையாக நடைபெற்ற இந்த ஆசியா-ஓசனியா மாநாட்டின் மூலம் உருவான ஒத்துழைப்பின் மூலம், மக்களுக்கு இடையே நெருக்கமான உறவைப் பேணுவதன் மூலம் சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றிய முக்கியமான செய்தியை நாங்கள் வழங்கியுள்ளோம். மக்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய பெறுமதியான குழுமத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.’’ என்று அவர் தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இராஜாங்க அமைச்சர்களான தேனுக விதானகமகே, ஜானக வக்கும்புர, ஜனாதிபதியின் பாராளுமன்ற விவகார ஆலோசகர் ஆஷு மாரசிங்க, சுற்றாடல், காலநிலை மாற்றம் மற்றும் பசுமை நிதி தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் ஆனந்த மல்லவதந்திரி, காலநிலை மாற்ற அலுவலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான வைத்தியர் அனில் ஜாசிங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ்.சத்தியானந்த, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, சுற்றால் அமைச்சின் செயலாளர் பி.கே.பி. சந்திரகீர்த்தி, உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள், Wildfowl & Wetlands Trust இன் சர்வதேச உறவுகள் முகாமையாளர் கிறிஸ் ரோஸ்ட்ரோன் (Chris Rostron) உட்பட சர்வதேச சதுப்பு நில பூங்கா பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்