அரையிறுதிக்கு போகும் அணிகள் இவை தான்… இன்று முதல் ஆளாக போகுமா இந்தியா…?

ICC T20 WC Semi Final Round: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் (ICC T20 World Cup 2024) சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் முதல் பிரிவிலும்; அமெரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இரண்டாவது பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த அரையிறுதிச்சுற்றுக்கு தகுதிபெறும். இன்னும் இரண்டாவது குரூப்பில் 2 போட்டிகள் மட்டுமே மிச்சம் இருக்கின்றன. ஆனால் இதுவரை எந்த அணிகளும் அரையிறுதிக்கு தகுதிபெறவில்லை. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் என மூன்று அணிகளுக்குமே சமவாய்ப்பு உள்ளது. 

தென்னாப்பிரிக்கா – மேற்கு இந்திய தீவுகளுடன் நாளை மோதும் நிலையில், இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது. நாளைய போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் வெற்றி பெற்றாலும் அதிக நெட் ரன்ரேட்டுடன் இருப்பது கூடுதல் நன்மையை தரும். இங்கிலாந்து அணி நாளை அமெரிக்காவுக்கு எதிராக வெற்றி பெற்றாலும் அதிக நெட் ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றாக வேண்டும். 

அந்த வகையில், இரண்டாவது பிரிவில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் என மூன்று அணிகள் முட்டிக்கொண்டிருக்க முதல் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளே அரையிறுதிக்கு வர அதிக வாய்ப்புள்ளது. இன்றைய போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றால் மட்டுமே திருப்பம் உண்டாகும். இந்திய அணி இன்று வெற்றி பெற்று, ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தானை வீழ்த்தும்பட்சத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி சம்பிரதாய போட்டியாக மாறிவிடும்.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய நான்கு அணிகள் ஏற்கெனவே டி20 உலகக் கோப்பையை கைப்பற்றி உள்ளன. தென்னாப்பிரிக்கா அதன் முதல் ஐசிசி உலகக் கோப்பையை கைப்பற்ற துடிப்புடன் விளையாடும் என்பதால் சூப்பர் 8 சுற்று வரும் நாள்களில் பரபரப்பாக நடைபெறும் எனலாம். 

ஜூன் 26 காலை 6 மணிக்கும், ஜூன் 27 இரவு 8 மணிக்கும் என இரண்டு அரையிறுதிப்போட்டிகள் நடைபெறுகிறது. ஜூன் 29ஆம் தேதி இரவு 8 மணிக்கு இறுதிப்போட்டி நடைபெறுகிறது. எனவே இந்த முறையும் ஏற்கெனவே கோப்பை வென்ற அணிகளான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் அணிகளே மீண்டும் அரையிறுதிக்கு வருமா அல்லது தென்னாப்பிரிக்க அணி புதிதாக கோப்பையை கைப்பற்றுமா என பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

இதுவரை நடந்த 8 டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள் ஆகிய அணிகள் மட்டும் மொத்தம் 6 முறை கோப்பைகளை வெற்றி பெற்றுள்ளன. முன்னாள் சாம்பியன்களான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த முறை குரூப் சுற்று போட்டிகளோடு வெளியேறிவிட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.