தூத்துக்குடி டு இலங்கை: சட்டவிரோதமாக கடத்த முயன்ற ரூ.8 கோடி போதைப்பொருள் – சிக்கிய தம்பதி!

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் போதை நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், கடல் வழியே இலங்கைக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணனின்  உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவு துனை கண்காணிப்பாளர் செந்தில் இளந்திரையன், ஆய்வாளர் மீகா, தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட நிர்மல்ராஜ் – ஷிவானி

அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கடற்கரை பகுதியான இனிகோ நகரில் ஒரு வீட்டில் அதிரடியாக திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு கிலோ எடையில் பேக்கிங் செய்யப்பட்டிருந்த 8 கிலோ எடையிலான கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைனை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த நிர்மல்ராஜ் மற்றும் அவரின் மனைவி ஷிவானி ஆகியோரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் இந்திய மதிப்பு ரூ.8 கோடி எனவும், சர்வதேச மதிப்பு ரூ.24 கோடி எனவும் கூறப்படுகிறது.  போதைப் பொருள் கடத்தி பிடிபட்டுள்ள நிர்மல்ராஜ் மீது ஏற்கெனவே தூத்துக்குடியில் கஞ்சா கடத்திய வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொழில் போட்டி காரணமாக சிலருடன் ஏற்பட்ட தகராறில் அவரை கொலை செய்ய முயன்றனர். இதில் நிர்மல்ராஜ் படுகாயம் அடைந்தார். மதுவிலக்கு போலீஸாரிடம் பேசினோம், “சென்னையில் இருந்து சர்வதேச போதை பொடுள் கடத்தல் கும்பல் தூத்துக்குடிக்கு கடல் வழியாக இலங்கைக்கு கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைனை கடத்திச் செல்ல நிர்மல் ராஜை ஏஜெண்டாக பயன்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இரண்டு முறை இலங்கைக்கு போதைப் பொருளை படகு மூலம் கடத்திச் சென்றுள்ளார் என்பது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாலாஜி சரவணன் – மாவட்ட எஸ்.பி

இந்த நிலையில்தான் 3வது முறையாக அவருக்கு வழங்கபட்ட போதைப் பொருளை தன் வீட்டில் பதுக்கியதும், அதனை விற்பனை செய்ய முயன்றதும் தெரிய வந்துள்ளது. இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தைச் சேர்ந்த ஒருவரையும், சென்னையில் இருந்து இவருக்கு போதைப் பொருள் சப்ளை செய்த சிலரையும் தேடி வருகிறோம். ‘ஐஸ்’ எனப்படும் இந்த கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைன் கெமிக்கல் போதை பொருள் ஆகும். இதற்கு சர்வதேச நாடுகளில் பெரும் மதிப்பு உள்ளது. அதனாலேயே அதிக விலைக்கு விற்கப்படுகிறது.

இதனை நிர்மல்ராஜ் ஏற்கெனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.1 லட்சம் என விலை பேசி 2 கிலோ விற்பனை செய்துள்ளார். அதற்கு முன்பணமாக ரூ.90 ஆயிரம் மட்டும் பெற்றுள்ளார். அந்த 2 கிலோ போதைப் பொருளுடன் ராமநாதபுரத்தைச் சேர்ந்த நபர் தப்பிச் சென்றுள்ளார். அவரை தேடிவருகிறோம்.” என்றனர்.

தூத்துக்குடியில் இருந்து பீடி இலைகள், மருந்துப் பொருட்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரங்கள், மஞ்சள், மசாலா பொருட்கள் உள்ளிட்டவை இலங்கைக்கு கடத்திச் செல்லப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதற்காக தடை செய்யப்பட்ட 20 குதிரைதிறன் இன்ஜின்கள் பொருத்தப்பட்ட அதிவேக படகுகள் சட்டவிரோதமாக இயங்கி வருகின்றன.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

கடலோர காவல்படை, மரைன் போலீஸார், கியூ பிரிவு போலீஸார், மத்திய, மாநில உளவுத்துறையினர் மற்றும் உள்ளூர் போலீஸார் இதனை பெரிதாக கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பெயரளவில் மட்டுமே இவர்கள் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதனால், இது போன்ற  கடத்தல் சம்பவங்கள்  பிற மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி கடல் வழியாக படகுகள் மூலம்  இலங்கைக்கு எளிதாக கடத்தப்படுகிறது. இதனை அனைத்து பாதுகாப்பு துறையினரும் இணைந்து கண்காணித்து கடத்தலை  தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

 .

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.