இந்திய கிரிக்கெட் அணி, டி20 உலக கோப்பை தொடர் முடிந்ததும் அடுத்தடுத்து ஆடும் போட்டிகளுக்கான காலண்டரை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த நாட்டில் டெஸ்ட் தொடரும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பார்டர்-கவாஸ்கர் டிராபி மற்றும் தென்னாப்பிரிக்காவில் நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர்களிலும் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்
தென்னாப்பிரிக்காவில் நவம்பர் 8, 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் டர்பன், போர்ட் எலிசபெத், செஞ்சுரியன் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் 4 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த அட்டவணை என்பது இந்திய அணி இரண்டு டெஸ்ட் தொடர்களுக்கு இடையில் நடக்க இருக்கிறது. அதனால், தென்னாப்பிரிக்கா தொடரில் மூத்த வீரர்கள் விளையாட வாய்ப்பில்லை. இந்த சூழலில் தான் நமீபிய கேப்டன் ஹெர்ஹார்ட் எராஸ்மஸ் பிசிசிஐயிடம் ஒரு வித்தியாசமான கோரிக்கையை வைத்தார். அது உடனடியாக வைரலாகியுள்ளது.
பயிற்சி போட்டியில் விளையாட கோரிக்கை
நம்பீயா கேப்டன் எராஸ்மஸ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்டிருப்பது என்னவென்றால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கு முன் நமீபியாவின் தலைநகரான வின்ட்ஹோக்கில் பயிற்சிப் போட்டியையாவது விளையாடுமாறு கேட்டுக் கொண்டார். அவர் எழுதியிருக்கும் பதிவில் “பிசிசிஐ, டி20 உலகக் கோப்பையில் நமீபியாவின் ஆட்டம் நன்றாக இல்லை. அதனால் தென்னாப்பிரிக்காவுக்கு வரும்போது, எங்கள் நாட்டில் வந்து பயிற்சி போட்டியிலாவது விளையாடுங்கள்” என கேட்டுள்ளார்
நமீபியா தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும்
நமீபியா கேப்டன் மட்டுமல்லாமல் ஸ்காட்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அணி கேப்டன்களும் ஐசிசி அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் நாடுகளிடம் இதேபோன்ற கோரிக்கையை வைத்திருக்கின்றனர். இந்த நாடுகள் எல்லாம் ஐசிசி அமைப்பில் அங்கீகரிப்படாத அசோசியேட்நேஷன்ஸ்களாக இருக்கின்றன. நமீபியா அணியைப் பொறுத்தவரை, அடுத்த டி20 உலக கோப்பைக்கு நேரடியாக தகுதி பெறவில்லை. இதனால் அந்த அணி தகுதிச் சுற்று போட்டிகளில் விளையாட வேண்டும். அடுத்த முறை டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்த உள்ளது.