கோவை: “முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று கோவையில் (ஜூன் 22) செய்தியாளர்களிடம் கூறியது: “மக்கள் பிரச்சினைக்காக, கள்ளச் சாராய இறப்புக்காக ஆர்ப்பாட்டம் நடத்த முறைப்படி காவல் துறைக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டு கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது திமுக அரசு அச்சப்படுவதைக் காண்பிக்கிறது. இதுபற்றி பேசக் கூடாது என திமுக நினைக்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் நூலகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை விட இரண்டரை மடங்கு டாஸ்மாக் கடைகள் அதிகம் உள்ளன. கள்ளச் சாராய இறப்பு என்று சொல்வதை விட கள்ளச் சாராயத்தால் திமுக நடத்திய படுகொலையாகும்.
வளர்ந்த தமிழகம், திராவிட மாடல் அரசு என இந்தியாவுக்கு தமிழகம் உதாரணம் என்று சொல்லிய காலம் போய்விட்டது. இன்று இந்தியாவின் முன்பு தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. கள்ளச்சாராய இறப்புகள் ஓராண்டு அல்ல, இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது. இதை கண்டித்து பேச உரிமை மறுக்கப்படுகிறது. ஜனநாயகத்துக்கு எதிரான கட்சி திமுக. அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான கட்சி திமுக.
தமிழக ஆளுநரை தொலைபேசியில் அழைத்து புகார் தெரிவித்தேன். பாஜகவின் கருத்து சுதந்திரத்தை திமுக பறித்துக் கொண்டிருக்கிறது. தனி மனிதன் பேசும் சுதந்திரத்தை திமுக தடுக்கிறது. கள்ளச் சாராய விவகாரத்தில் திமுகவுக்கு இருக்கும் தொடர்பையும் ஆளுநரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளோம். திமுக அரசு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்பது குறித்த கேள்வியை ஆளுநரிடம் முன் வைக்க உள்ளோம்.
திமுக தலைவர்களுக்கும், கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு உள்ள தொடர்பை விசாரிக்க சிபிஐ விசாரணை தேவைப்படுகிறது. சிபிஐ விசாரணை நடந்தால்தான் முழு உண்மை வெளியே வரும்.
தமிழக முதல்வர் ஏன் கள்ளக்குறிச்சி செல்லவில்லை? முதல்வரால் அங்கு செல்ல முடியாது. ஆளும் முதல்வரை கள்ளக்குறிச்சிக்கு விடாத சூழல் நடந்துள்ளது. தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். கள்ளச் சாராய விவகாரம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எதிரொலிக்க வேண்டும்” என்றார் அண்ணாமலை.