குண்டூர்: குண்டூர் மாவட்டம், தாடேபல்லி கூடம் சீதாநகரில் ஜெகன்மோகன் ஆட்சியில், நீர்வளத்துறைக்கு சம்மந்தப்பட்ட 17 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, அதில் 2 ஏக்கரில் மிகப்பெரியதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகம் கட்டப்பட்டு வந்தது.
கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், ஆந்திராவில் ஆட்சி மாறியது. ஆதலால், இக்கட்டிடம் நில ஆக்கிரமிப்பு செய்து, சட்டத்தை மீறி கட்டியது என்பதால் நேற்று அதிகாலை 5.30 மணியில் இருந்து மாநகராட்சி அதிகாரிகள் 2 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு இடித்தனர்.
கட்சி அலுவலகம் கட்ட பட்டா இல்லை. திட்ட அனுமதி பெறவில்லை. எந்தவொரு அனுமதியும் இன்றி இக்கட்டிடம் கட்டப்பட்டு வருவதாக குண்டூர் மாவட்ட தெலுங்குதேசம் கட்சியின் செயலாளர் ஸ்ரீநிவாச ராவ் மாநகராட்சி ஆணையருக்குப் புகார் அளித்ததின் பேரில்,நேற்று ஆக்கிரமிப்பு கட்டிடம் ஜேசிபி இயந்திரங்களால் இடிக்கப்பட்டது.
இதேபோன்று, கடந்த 2019-ல் ஜெகன்மோகன் ஆட்சிக்கு வந்ததும், அமராவதியில் சந்திர பாபு ஆக்கிரமிப்பு செய்து வீட்டை கட்டியுள்ளார் என கூறி, அவரது வீட்டின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.