கர்நாடக மாநிலம, புத்தூர் காவல் நிலையத்துக்கு 2001-ம் ஆண்டு வந்த மல்லிகா ராய் என்றப் பெண் தன் கணவர் விஸ்வநாத் ராயை இரண்டு நாள்களாக காணவில்லை. அவரைக் கண்டுபிடித்து தரவேண்டும் எனப் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மல்லிகா ராயிடம் காவல்துறை விசாரித்ததில், “2001 ஜூன் 7, அன்று, ஃபைனான்சியரான என் கணவர் விஸ்வநாத் ராயுடன் கடைசியாக பேசினேன். அப்போது அவர் உப்பினங்கடியில் உள்ள அவரது நிதி நிறுவனமான ஷிவா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மேலாளரான விஸ்வநாத் ஷெட்டியுடன் இருப்பதாக கூறினார்.
அதைத் தொடர்ந்து மீண்டும் அவரை அழைத்தபோது விஸ்வநாத் ஷெட்டிதான் அழைப்பை எடுத்தார். அப்போது, தாளப்பாடியில் இருப்பதாகவும், மழை பெய்வதாகவும் கூறினார். என் கணவரிடம் போனை கொடுக்கும்படி கேட்டபோது, விஸ்வநாத் ஷெட்டி அழைப்பை துண்டித்துவிட்டார்” எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஹொன்னாவரில் அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை அந்த சடலத்தை மீட்டு, மல்லிகா ராயின் உதவியுடன் அது விஸ்வநாத் ராயுடைய சடலம் என்பதை அடையாளம் கண்டது.
உடனே காவல்துறை விஸ்வநாத் ஷெட்டியின் வீட்டாரிடம் விசாரணையைத் தொடங்கியது. அப்போது விஸ்வநாத் ராயின் மனைவி, “ஜூன் 7ம் தேதி, குவைத்திலிருந்து ஒரு நண்பர் வந்திருப்பதாகவும், விஸ்வநாத் ஷெட்டியுடன் மங்களூருவுக்குச் செல்வதாகவும் என் கணவர் கூறினார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் மங்களூர் சென்ற காவல்துறை மங்களூருவில் கத்ரி பார்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த விஸ்வநாத் ஷெட்டியின் காரை கண்டுபிடித்தது.
மேலும், தொடர்ந்து நடத்திய விசாரணையில், கொலை நடந்த அன்று, விஸ்வநாத் ராயும் விஸ்வநாத் ஷெட்டியும் நிதி விவகாரம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாகவும், விஸ்வநாத் ராயுடைய நிறுவனத்தின் ஊழியரான சுபாஷ் சந்திரா, விஸ்வநாத் ஷெட்டி விஸ்வநாத் ராய் ஆகியோர் சேர்ந்து, மங்களூரில் இருக்கும் விஸ்வநாத் ராயின் வீட்டில் இருந்ததையும் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து விஸ்வநாத் ஷெட்டியின் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு காவல்துறை பல குழுக்களை அனுப்பி அவரைத் தேடியது. ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும், விஸ்வநாத் ஷெட்டியின் தொலைபேசியையும் கண்காணித்தனர், ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் புத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாறியதால், விஸ்வநாத் ராய் கொலை வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், செப்டம்பர் 2012-ல், காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் மீண்டும் புத்தூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவர் முடிக்கப்படாத வழக்குகளை மீண்டும் விசாரிக்கத் தொடங்கினார். அதில் ஒன்று விஸ்வநாத் ராயின் கொலை வழக்கு. இந்த வழக்கில் மிக முக்கியமான ஒரு சந்தேகம் காவல்துறைக்கு எழுந்தது.
கணவன் காணாமல் போனபிறகும் அதே ஊரில் வசித்து வந்த விஸ்வநாத் ஷெட்டியின் மனைவி காவல் நிலையத்தில் அது தொடர்பாக எந்த வகையிலும் மீண்டும் வந்து விசாரிக்கவில்லை. எனவே, அவரைக் கண்காணிக்க காவல்துறை முடிவு செய்தது. அதன் அடிப்படையில், இரண்டு காவலர்கள், விஸ்வநாத் ஷெட்டியின் மனைவியையும் அவருடைய மகனையும் கவனிக்கத் தொடங்கினர். அவர்களுடைய செல்போன் எண்ணை வைத்து ஆய்வு செய்ததிலும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் விஸ்வநாத் ஷெட்டியின் மகன் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துகொள்வது தெரியவந்தது.
அப்போதுதான் அவர் இரண்டு செல்போன் பயன்படுத்துவதும், அதில் ஒரு எண் மட்டுமே அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருப்பதும், மற்றொரு செல்போன் எண் யாருக்கும் கொடுக்காமல் இருப்பதும் கண்டுபிடித்தனர். எனவே, கிரிக்கெட் டோர்னமெண்ட் போட்டிக்கு செல்லும் அவரிடம் அந்த நிர்வாகம் மூலமே மற்றொரு எண் வாங்கப்பட்டது. அந்த எண்ணை ஆய்வு செய்ததில், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை அந்த எண்ணுக்கு ஒரே எண்ணிலிருந்து அழைப்பு வருவது தெரியவந்தது. அதே எண்ணிலிருந்து அந்த சிறுவனின் அம்மாவுக்கு அழைப்பு வருவதும் 30 நிமிடங்கள் வரை பேசிக்கொள்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த எண் தமிழ்நாட்டின் ஈரோடு வனப்பகுதியில் பயன்படுத்தப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விஸ்வநாத் ஷெட்டி கைதுசெய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து, விஸ்வநாத் ஷெட்டி அளித்த வாக்குமூலத்தில்,“ விஸ்வநாத் ராயை கம்பியால் அடித்து கொலை செய்துவிட்டு, அந்த சடலத்தை காரில் வைத்து எடுத்துச் சென்று ஹொன்னாவரில் வீசினேன். மீண்டும் காரை மங்களூர் கொண்டுவந்து விட்டுவிட்டு, அங்கிருந்து கேரள மாநிலத்தின் பாலக்காடு சென்றேன். அங்கு ஒரு மருத்துவரிடம் வேலைக்கு சேர்ந்தேன். அவருக்கு என்னுடைய வேலை பிடித்துவிட்டதால், தமிழ்நாட்டின் ஈரோட்டில் இருக்கும் அவருடைய பண்ணை வீட்டுக்கு வேலைக்கு அழைத்து வந்தார்.
நான் சம்பாதித்த பணத்தை வைத்து ராஜ் பைனான்ஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கினேன். அந்த பெயராலேயே அறிமுகம் செய்துகொண்டேன். மூன்று மாதத்துக்கு ஒருமுறை, மனைவியை பல்வேறு ஊர்களுக்கு வரவழைத்து ஹோட்டலில் ரூம் எடுத்து சந்தித்துக்கொள்வோம். என் மனைவி கோர்ட்டில் உதவியாளராக வேலை செய்ததால் வழக்கு தொடர்பான தகவல்களை எனக்கு சொல்வாள்” எனத் தெரிவித்தார். இப்படிதான் விஸ்வநாத் ஷெட்டி தலைமறைவாக இருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88