AFG v AUS : `இதுதான்டா கிரிகெட்!' – மிரட்டிய ஆப்கானிஸ்தான்; கிறுகிறுத்துப் போன ஆஸ்திரேலியா!

கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறது ஆப்கானிஸ்தான். யானையின் காதில் புகுந்த எறும்பைப் போல ஆஸ்திரேலியாவை கிறுகிறுக்க வைத்து கிரிக்கெட் உலகின் மாபெரும் அப்செட்டை நிகழ்த்தியிருக்கிறது ஆப்கானிஸ்தான். கடந்த ஓடிஐ உலகக்கோப்பையில் விட்ட குறையை இப்போது மிரட்டலாக தீர்த்து அசத்தியிருக்கிறது.

டாஸை வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஸ் முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார். இதுவே ஆஃப்கானிஸ்தானுக்கு சாதகமான முடிவாகத்தான் இருந்தது. ஆஃப்கானிஸ்தானுக்கு சேஸிங் என்றால் ஆகாது. ‘நாங்கள் டாஸை வென்றிருந்தாலும் முதலில் பேட்டிங்தான் எடுத்திருப்போம்.’ என மகிழ்ச்சி பொங்க கூறினார் ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத்கான். ரஷீத்தின் மகிழ்ச்சிக்கு ஏற்ற வகையில் ஆப்கானிஸ்தானின் பேட்டிங்கும் சிறப்பாக அமைந்தது. ரஹ்மானுல்லா குர்பாஸும் இப்ராஹிம் ஷத்ரானும் ஓப்பனர்களாக இறங்கினார்கள். இது ஒரு நல்ல கூட்டணி இந்த உலகக்கோப்பையின் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்த கூட்டணி 100 ரன்களை கடந்து ஆப்கானிஸ்தானுக்கு போட்டியை வென்று கொடுத்திருந்தது. இந்தப் போட்டியிலும் இவர்கள் இருவரும் அசத்தினார்கள்.

இங்கேயும் முதல் விக்கெட்டுக்கே 100 ரன்களுக்கு மேல் திரட்டி பிரமாதப்படுத்தினர். 16 ஓவர் வரைக்கும் இந்தக் கூட்டணியை ஆஸ்திரேலிய அணியால் பிரிக்க முடியவில்லை. குர்பாஸூம் ஷத்ரானும் மிகச்சிறப்பாக இன்னிங்ஸை கட்டமைத்திருந்தனர். இந்த ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்திருந்தனர்.

ஆஸ்திரேலிய அணி ஸ்பின்னரான ஆஸ்டன் அகருடன் பௌலிங்கை தொடங்கியது. அப்படியே ஹேசல்வுட், கம்மின்ஸ் ஆகியோரின் கைகளுக்கு பந்து மாறியது. ஆரம்பத்திலிருந்து இருவருமே அவசரப்படவில்லை. துடித்துக் கொண்டு பெரிய ஷாட்டுக்கு செல்லாமல் நிலைத்து நிற்கவே விரும்பினார். இதனால் பெரிதாக ரிஸ்க் எடுக்கவில்லை. நிறைய டாட்களை ஆடினர். முதல் 3 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தனர். ஆனால், இதன்பிறகு ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் விரட்டி ரன்ரேட்டை மெது மெதுவாக உயர்த்தினர். இந்தக் கூட்டணி நிற்க நிற்க ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கூடியது. கேட்களை ட்ராப் செய்தார்கள், எக்கச்சக்கமான மிஸ் ஃபீல்ட்கள், தவறான ரிவியூவ்கள் என முழுமையாக சொதப்பினர். டி20 உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரைக்கும் 12 ஓவர்களை தாண்டியும் ஆஸ்திரேலியா விக்கெட் எடுக்காமல் இருந்ததில்லை.

உலகக்கோப்பையை தவிர்த்து டி20ஐக்கள் என எடுத்துக் கொண்டால் கூட கடைசியாக 2018 இல்தான் பாகிஸ்தானுக்கு எதிராக இப்படி அதிகமான ஓவர்களுக்கு விக்கெட் எடுக்காமல் இருந்திருக்கிறார்கள். ஆஸ்திரேலியாவின் தடுமாற்றத்தை பயன்படுத்திக் கொண்டு குர்பாஸ், ஷத்ரான் இருவரும் அரைசதத்தை கடந்தனர். பவுண்டரி சிக்சர்களுக்கு ஈடாக நிறைய ரன்களை ஓடி ஓடியும் எடுத்திருந்தனர். 15 ஓவர்களில் 109 ரன்களைச் சேர்த்திருந்தனர். இதன்பிறகு வேகமாக ஆடி 170-180 ஸ்கோரை எடுக்க வேண்டும் என்ற முனைப்பை வெளிக்காட்டத் தொடங்கினார். இங்கேதான் ஆப்கானிஸ்தான் சறுக்கத் தொடங்கியது. ஸ்டாய்னிஸின் பந்தில் 60 ரன்களில் குர்பாஸ் பெரிய ஷாட்டுக்கு முயன்று அவுட். அவர் வெளியான வேகத்தில் அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் காலி.

Gurbazz

ஷத்ரான் ஷம்பாவின் பந்தில் 51 ரன்களில் அவுட். கடந்த போட்டியில் ஹாட்ரிக் எடுத்த கம்மின்ஸ் இந்தப் போட்டியிலும் ஸ்லோயர் ஒன்கள் ஷார்ட்டர் டெலிவரிக்கள் என வீசி தொடர்ச்சியாக இரண்டாவது ஹாட்ரிக்கை எடுத்தார். இதன்விளைவாக ஆப்கானிஸ்தான் அணி 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அவர்கள் ஆடிய விதத்திற்கு கண்டிப்பாக 20-30 ரன்கள் குறைவுதான். ஆனாலும் போட்டி நடைபெறும் கிங்ஸ்டவுணில் உலகக்கோப்பையில் இரண்டாம் இன்னிங்ஸில் எடுக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச ஸ்கோரே 134 தான் என்பதால் ஆப்கானிஸ்தான் மீது நம்பிக்கை இருந்தது.

கடந்த ஓடிஐ உலகக்கோப்பையில் விட்டதை இந்த உலகக்கோப்பையில் சாதிப்பார்களா எனும் எதிர்பார்ப்புடன் ஆப்கானிஸ்தானின் பௌலிங் தொடங்கியது. முதல் ஓவரிலேயே சர்ப்ரைஸ். நவீன் உல் ஹக் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து வீசிய ஒரு அற்புதமான அவுட் ஸ்விங்கரில் ஹெட் போல்டை பறிகொடுத்து டக் அவுட் ஆனார். அதே நவீன் உல் ஹக்கின் அடுத்த ஓவரில் மிட்செல் மார்ஸை வேகத்தை மாறுபடுத்தி ஏமாற்றி அற்புதமாக வீழ்த்தினார். 130 கி.மீ க்கு மேல் தொடர்ச்சியாக வீசி விட்டு 108 கி.மீ இல் மெதுவாக வீசிய ஒரு பந்துக்கு அரைகுறையாக பேட்டை விட்டு கேட்ச் ஆகி வெளியேறினார் மிட்செல் மார்ஸ். பவர்ப்ளேயின் கடைசி ஓவரில் பந்து நபியிடம் வந்தது. அந்த ஓவரிலேயே நபியை மடக்கி அடிக்க முற்பட்டு வார்னர் ஷார்ட் ஃபைன் லெக்கில் கேட்ச் ஆனார்.

Naveeen

ஆஸ்திரேலியா பவர்ப்ளேயில் 33 ரன்களை மட்டுமே சேர்த்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆப்கானிஸ்தானின் மீதான நம்பிக்கை இன்னும் கூடியது.

Australia

ஆனால், கடந்த உலகக்கோப்பையில் மேக்ஸ்வெல் எப்படி ஒற்றை ஆளாக ஒற்றை காலில் ஆடி அசத்தினாரோ அதேபோல இங்கேயும் நின்று ஆடி மிரட்டினார். அணியை சரிவிலிருந்து மீட்க கடுமையாக முயற்சித்தார். ஏதுவான பந்துகளில் பெரிய ஷாட்டை அடித்து அரைசதத்தையும் கடந்தார். இந்த சமயத்தில்தான் குல்பதின் சர்ப்ரைஸ் கொடுத்தார். குல்பதின் இந்தப் போட்டிக்கு முன்பாக இந்த உலகக்கோப்பையில் மொத்தமாக 4 ஓவர்களைத்தான் வீசியிருந்தார். ஆனால், இங்கே அவர்தான் ஹீரோ. ஆபத்தான அத்தனை விக்கெட்டுகளையும் வீழ்த்திக் கொடுத்தார். ஸ்டாய்னிஸை எட்ஜ் ஆக்கி கீப்பரிடம் கேட்ச் ஆக்கினார். டிம் டேவிட்டை அற்புதமாக lbw ஆக்கினார். அடுத்ததாக பயமுறுத்திக் கொண்டிருந்த மேக்ஸ்வெல்லை ஷாட் ஆட தூண்டி கல்லியில் நூர் அகமது அற்புதமாக கேட்ச் பிடிக்க காரணமாக இருந்தார். கம்மின்ஸையும் ஸ்டம்புகள் சிதற வெளியேற்றினார். 4 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். மேட்ச் வின்னிங் ஸ்பெல் இது.

Gulbadin

கடைசி 3 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. கையில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இருந்தது. டெயில் எண்டர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. 127 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட். 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வென்றது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் வரலாற்றில் மறக்கவே முடியாத மாபெரும் அப்செட்டை ஆப்கானிஸ்தான் நிகழ்த்தி அசத்தியிருக்கிறது. வரலாற்றில் முதல் முறையாக ஆஸ்திரேலிய அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியிருக்கிறது. ஆஸ்திரேலியா வெடவெடத்து போய் நிற்கிறது. அணியாக ஒரு கூட்டு உழைப்புக்கும் உத்வேகத்துக்கும் கிடைத்திருக்கும் வெற்றி இது

Afghanistan

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கான வாய்ப்பை ஆப்கானிஸ்தான் இன்னும் பிரகாசப்படுத்தியுள்ளது. வங்கதேசத்தை வீழ்த்திவிட்டால் ஆப்கானிஸ்தான் அரையிறுதியில் காலடி எடுத்து வைக்கும் என குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.