வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியிருக்கும் இந்திய அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது. சூப்பர்8 குரூப் போட்டியில் இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தை கெட்டியாக பிடித்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி என இரண்டாம் இடமும், ஆப்கானிஸ்தான் அணி மூன்றாம் இடமும் வகிக்கின்றன. இந்த மூன்று அணிகளுக்குமே இப்போதைய சூழலில் அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எஞ்சியிருக்கும் ஒரு போட்டியின் முடிவைப் பொறுத்து, டாப் 2 அணிகள் அரையிறுதிக்கும், ஒரு அணி வெளியேயும் செல்லும்.
இந்திய அணியைப் பொறுத்தவரை பவுலிங் டாப் கிளாஸாக இருக்கிறது. பேட்டிங் இன்னும் சுமாராகவே இருக்கிறது. வங்கதேசம் அணிக்கு எதிராக 196 ரன்கள் விளாசியதை வைத்தெல்லாம் இந்திய அணி பேட்டிங் செம ஸ்டிராங்காக இருக்கிறது என நினைத்தால், அது மண்குதிரையை நம்பி ஆற்றில் பயணித்த கதை தான். நட்டாற்றில் கரைந்து விடும். அதுபோல, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட டாப் கிளாஸ் பவுலிங் மற்றும் போட்டி கொடுக்கக்கூடிய அணிகளுக்கு எதிராக ஆடும்போது தான் உண்மையாகவே இந்திய அணியின் பேட்டிங் பற்றி தெரியவரும். அதற்கு ரொம்ப நாள் எல்லாம் இல்லை, ஜூன் 24 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தெரிந்துவிடும். இப்போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெறும். ஆஸ்திரேலியா தோற்றால் மூட்டை முடிச்சுகளுடன் தாயகம் திரும்ப வேண்டியது தான். ஏனென்றால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அந்த அணி தோல்வியடையும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.
அந்த அணிக்கு ஏற்பட்ட எதிர்பாராத தோல்வி, ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை அரையிறுதிக்கான வாய்ப்பில் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. இந்த சூழலில் இந்திய அணியின் பேட்டிங் குறித்து ரோகித் சர்மா தெரிவித்திருக்கும் கருத்து வைரலாகியுள்ளது. ஏற்கனவே அவருடைய பேட்டிங் மோசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கும் நிலையில், தன்னுடைய பேட்டிங் ஸ்டைல் குறித்து ஒரு மொக்கையான விளக்கதை காரணமாக தெரிவித்துள்ளார்.
பேட்டிங் குறித்து ரோகித் சர்மா பேசும்போது, “என்னுடைய பேட்டிங் பாணி குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டேன். முடிந்தளவுக்கு எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம். அப்படி தான் கடந்த சில ஆண்டுகளாகவே விளையாடிக் கொண்டிருக்கிறேன். டி20 போட்டிகளைப் பொறுத்தவரை 50, 100 எல்லாம் ஒரு மேட்டர் கிடையாது. நீங்கள் எவ்வளவு சீக்கிரம் எதிரணி மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதே முக்கியம். அதையே வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ஒரு பேட்டிங் யூனிட்டாக செய்தோம். ஹர்திக் மட்டும் தான் 50 அடித்தார். அதாவது ஒரே ஒரு பேட்டர் 50 ரன்கள் அடித்தால் கூட 196 ரன்கள் எடுக்க முடியும் என காட்டியிருக்கிறோம்.
பேட்ஸ்மேன்கள் எல்லோரும் சராசரியான ரன்கள் எடுக்கும்போது, இயல்பாகவே எதிரணி மீது அழுத்தம் ஏற்பட்டுவிடும். அதனால், கவலைப்படுவதற்கு இதில் ஒன்றும் இல்லை. நாங்கள் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறோம். அடுத்த போட்டிகளிலும் இதைப் போலவே சிறப்பாக ஆடுவோம்” என தெரிவித்துள்ளார். அவரின் கருத்து பாசிட்டிவாக இருந்தாலும், ரன் அடிக்காதற்கு விளக்கம் ஒன்றை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.