புதுடெல்லி: கடந்த மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் வழக்கில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சகம் அளித்த புகாரின் பேரில், நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது என்று சிபிஐ அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இதே முறைகேட்டில் பதியப்பட்டுள்ள மற்ற வழக்குகளையும் தம்வசம் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கைகளையும் சிபிஐ மேற்கொண்டுள்ளது.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, இன்று (ஜூன் 23) வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது சிபிஐ.
தேசிய தேர்வு முகமை நடத்திய நடப்பு ஆண்டுக்கான நீட் மற்றும் நெட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. தொடர்ந்து, நீட் நுழைவுத் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வினாத்தாள் கசிவு, தேர்வு முறையில் முறைகேடு, கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண் போன்றவற்றை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
தற்போது இது நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதில் கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அந்த மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மாணவர்கள் நீட் மறுதேர்வு வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.
இந்த நிலையில், யுஜிசி நெட் தேர்வில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக அந்தத் தேர்வை மத்திய அரசே ரத்துசெய்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 18-ம் தேதி இந்த தேர்வு நடைபெற்றது. யுஜிசி நெட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தேசிய சைபர் குற்றப் பிரிவிலிருந்து தகவல் கிடைத்திருப்பதாகக் கூறி நெட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது. தொடர்ந்து இன்று (ஜூன் 23) நடைபெறவிருந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.