நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பாலிவுட்டில் பல திரைப்படங்களைத் தயாரித்து வரும் பிரபல பாலிவுட் நடிகரான அனுபம் கெரின் மும்பை அலுவலகத்தில் கடந்த இரண்டு நாளுக்கு முன் திருட்டுச் சம்பவம் நடந்திருந்தது.
இது தொடர்பாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த அனுபம் கெர், “இரண்டு மர்ம நபர்கள் வீரதேசாய் சாலையிலுள்ள எனது அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து முக்கியமான ஆவணங்கள், திரைப்படங்களின் நெகட்டிவ்கள், விலையுயர்ந்த பொருள்கள் உள்ளிட்டவற்றை திருடியுள்ளனர். இது தொடர்பாகக் காவல்துறையில் புகாரளித்து FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் இருக்கும் சிசிடிவி காணொலியை வைத்து மர்ம நபர்களைப் பிடித்துவிடலாம் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர். இது தொடர்பாக தீவிர விசாரணையும் செய்து வருகின்றனர். கடவுள் அந்தக் குற்றவாளிகளுக்கு ஞானத்தைக் கொடுத்திட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைதளங்களில் வைரலாகியிருந்தது.
இதற்குப் பலரும், ‘பாலிவுட்டின் முன்னணி நடிகரின் அலுவலகத்திற்கே பாதுகாப்பில்லை என்றால் சாமானி மக்களின் நிலை என்ன?” என்று பதிவிட்டு வைரலாக்கியிருந்தனர். இந்நிலையில் சிசிடிவியில் பதிவானக் காணொலிகளை அடிப்படையாக வைத்து காவல் துறையினர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டோரைக் கண்டுபிடிக்க தீவிரப் பணியில் இறங்கி, இரண்டு பேரை 48 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டோரை 48 மணி நேரத்தில் கண்டுபடித்தக் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ள அனுபம் கெர், “மும்பை காவல் துறைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். என் அலுவத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரையும் கைது செய்துள்ளனர். என்னுடைய ‘MaineGandhiKoNaiMara’ படத்தின் நெகட்டிவ் காப்பியும் கைப்பற்றப்பட்டது. இதையெல்லாம் 48 மணி நேரத்திற்குள் நடத்தி முடித்திருக்கும் காவல்துறையின் வலிமையை நினைக்கையில் வியப்பாகயிருக்கிறது” என்று பதிவிட்டு காவல் துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.