மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலை கிராமங்களில் கள்ளச் சாராயம் குறித்து பொது மக்களிடையே வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் உற்பத்தி, சட்ட விரோதமாக மது விற்பனை தடுக்க போலீஸார் கடந்த 3 நாட்களாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு, கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், சேலம் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில் கள்ளச்சாரயம் குறித்து வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங் ரவி உத்தரவின் பேரில், மேட்டூர் வனச்சரக அலுவலர் சிவனாந்தம் தலைமையிலான ஊழியர்கள் வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலமலை எல்லைக்கு உட்பட்ட மேற்கு பிரிவு ராமன்பட்டி, பெரியகுளம், உள்ளூர் தண்டா தெற்கு பிரிவு மற்றும் பாலமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் வனத்துறை ஊழியர்கள் கள்ளச்சாராயம் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், வனப்பகுதி மற்றும் அதனை ஒட்டிய கிராமங்களில் கள்ளச் சாராய ஊறல்கள் போடப்பட்டு இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “மேட்டூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பாலமலை வனப்பகுதியில் கள்ளச் சாராயம் ஊறல் போடப்பட்டு இருக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. பாலமலை பகுதியில் உள்ள கிராமங்களில் விஷேச நிகழ்ச்சிக்கு கள்ளச் சாராயம் யாரும் காய்ச்ச கூடாது. இதுபோன்ற நிகழ்ச்சியின்போது, எவரேனும் கள்ளச்சாராயம் காய்ச்சினால் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கள்ளச் சாராயத்தினால் ஏற்படும் பாதிப்பு குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது” என்றனர்.