புதுடெல்லி: அயோத்தி ஹனுமன் கோயில் மடத்தலைவர் ராஜு தாஸின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இங்கு பாஜக தோல்வியால் தொடரும் சர்ச்சை குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நடந்து மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு உத்தரப்பிரதேசத்தில் பின்னடைவு ஏற்பட்டது. அயோத்தியில் அக்கட்சி அடைந்த தோல்வி நாடு முழுவதிலும் அதிர்வலைகளை உண்டாக்கியது.
இதையடுத்து எழுந்த சர்ச்சைகள் தொடர்கின்றன. இந்த பட்டியலில், புதிதாக அயோத்தியின் ஹனுமன் கோயில் மடத்தலைவர் ராஜு தாஸின் பாதுகாப்பு வாபஸ் விவகாரமும் இணைந்துள்ளது.
பாஜக தோல்வி குறித்து ஆலோசனை செய்ய அயோத்திக்கு மாநில அமைச்சர்களான சூர்ய பிரதாப் ஷாஹி மற்றும் ஜெய்வீர்சிங் வந்திருந்தனர். இவர்கள் நடத்தியக் கூட்டத்தில் ஆயோத்தி மாவட்ட ஆட்சியரான நிதிஷ் குமாரும் இருந்துள்ளார்.
அப்போது, கூட்டத்தில் கலந்துகொண்ட மடத்தலைவர் ராஜு தாஸ், பாஜக தோல்விக்கு காரணம் மாவட்ட நிர்வாகம்தான் எனப் புகார் கூறி உள்ளார். இந்தசமயத்தில், ராஜு தாஸ் மற்றும் ஆட்சியர் நிதிஷுக்கு இடையே வாக்குவாதம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து மறுநாள், அயோத்யா மாவட்ட ஆட்சியரால் மடத்தலைவர் ராஜு தாஸுக்கு அளித்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இதற்கு மடத்தலைவர் ராஜு தாஸ் மீது சமீபத்தில் பதிவான 3 கிரிமினல் வழக்குகளே காரணம் எனக் கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த மடத்தலைவர் ராஜு தாஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தத் துவங்கி உள்ளார். இந்த பிரச்சனை குறித்து உ.பி. முதல்வர், பாஜக மாநிலத் தலைவர்களிடம் புகார் கூறி வருகிறார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ராஜு தாஸ் கூறும்போது, “ஐஏஎஸ் – பிசிஎஸ் அதிகாரிகள் நாம் கூறும் கருத்துக்களை தவறாகக் கருதக் கூடாது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளபோது, ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்கள், குடியிருப்புகளை காலி செய்யவோ, இடிக்கவோ நிர்வாகம் நோட்டீஸ் அளித்திருக்கக் கூடாது. ஜனநாயக நாட்டில் பொதுமக்கள்தான் அரசர்களே தவிர அதிகாரிகள் அல்ல.
இந்த கருத்தை கூறுவதால் நாம் கிரிமினலாக்கப்பட்டு விடுகிறோம். நான் பிரதமர் மோடி, முதல்வர் யோகியின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டு வருகிறேன். மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்காகவும் உழைத்தேன். ஆனால், அது இங்குள்ள அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை எனத் தோன்றுகிறது.
வாபஸ் பெறப்பட்ட எனது பாதுகாப்பால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அப்படி எதுவும் நிகழ்ந்தால் அதற்கு நிர்வாகமே காரணம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர் இன்று (ஜூன் 23) லக்னோவில் முதல்வர் யோகியை சந்தித்து புகார் அளித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
மடத்தலைவர் ராஜு தாஸின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறித்து பாஜக தலைவர்கள் மவுனம் காத்து வருகின்றனர். எனினும். இந்த விவகாரத்தில் சமூகவலைதளங்களில் பல்வேறு சர்ச்சை கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
உ.பி.யின் புனித நகரங்களில் உள்ள பல மடங்களின் அதிபர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பிலான இந்த பாதுகாப்பை துறவிகளான மடத்தலைவர்கள் தனிக் கவுரமாகக் கருதுவது உண்டு என்பது நினைவுகூரத்தக்கது.