டேட்டிங்-ஆப் பழக்கம்; தனியாக இருக்கும்போது வீட்டுக்கு வா… அழைத்த பெண்களுக்கு நேர்ந்த கொடூரம்

புதுடெல்லி,

டெல்லியில் மோகன் கார்டன் பகுதியை சேர்ந்த இருவர் டேட்டிங்-ஆப் (டேட்டிங் செயலி) வழியே பெண்களை தொடர்பு கொண்டுள்ளனர். அதன்பின்னர் பெண்களிடம் அவர்கள் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி கடந்த மே 31-ந்தேதி 28 வயது இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், 2 நாட்களுக்கு முன் ஜதின் (விஜய் குமார் கமல்) என்ற பெயரில் நபர் ஒருவர் டேட்டிங்-ஆப் வழியே அந்த பெண்ணை தொடர்பு கொண்டிருக்கிறார். இதன்பின்பு, பல முறை மெசேஜ் அனுப்பி தொடர்பை வலுப்படுத்தி இருக்கிறார்.

இருவரும் பேச தொடங்கினர். இதன்பின்னர், வீட்டில் தனியாக இருக்கும்போது, நேரில் வந்து சந்திக்கும்படி ஜதினிடம் அந்த பெண் கூறியிருக்கிறார். இதன்படி கடந்த மே 30-ந்தேதி, வீட்டுக்கு வரும்படி அழைத்திருக்கிறார். ஆனால், அன்றைய தினம் தன்னுடைய நண்பருடன் அந்நபர் சென்றிருக்கிறார் என புகாரில் பெண் தெரிவித்து இருக்கிறார்.

இதற்கு பின்னர், அவர்கள் இருவரும் அறை ஒன்றிற்குள் பெண்ணை கொண்டு சென்றுள்ளனர். அந்த 2 பேரும் பெண்ணின் கைகளையும், கால்களையும் கட்டிப்போட்டு, வாயை துணியால் சுற்றி மூடியுள்ளனர்.

அவர்கள் அந்த பெண்ணை அடித்து, துன்புறுத்தி அவரிடம் இருந்து தங்க நகைகள், செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இதுபற்றிய வழக்கில், காவல் ஆய்வாளர் கமலேஷ் குமார் தலைமையில் விசாரணை நடந்தது.

சி.சி.டி.வி. பதிவில், வெள்ளை நிற கார் ஒன்றில் 2 பேர் பெண்ணின் வீட்டுக்கு வந்தது தெரிந்தது. சந்தேக நபர்களின் செல்போன் அழைப்புக்கான பதிவுகளை ஆய்வு செய்ததில், ரோகிணி பகுதியில் மற்றொரு பெண்ணிடம் விஜய் பேசியது தெரிய வந்தது.

இதுபற்றிய விசாரணையில், இதே முறையில் 46 வயது பெண்ணிடம் விஜய் கொள்ளையில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்தது. அந்த பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். பள்ளி செல்லும் 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த பிப்ரவரியில் டேட்டிங் ஆப் வழியே விஜய்யை சந்தித்திருக்கிறார்.

அவர் தன்னை சுனில் நாகி என பெண்ணிடம் அறிமுகப்படுத்தி கொண்டார். அந்த பெண் தனியாக இருந்தபோது, கூட்டாளியுடன் வீட்டிற்கு சென்ற விஜய் பழைய பாணியில் கொள்ளையடித்து தப்பியுள்ளார். குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிட்டு பயந்து போய் போலீசில் எதுவும் தெரிவிக்காமல் இருந்து விட்டார். எனினும், போலீசார் விசாரித்தபோது, கடந்த 19-ந்தேதி நடந்த விவரங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பெண்ணிடம் பறித்த செல்போனை கொண்டே மற்றொரு பெண்ணை தொடர்பு கொண்டு பேசியதும், காரின் நம்பர் பிளேட் எண்ணை மாற்றி பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுபோன்ற மொத்தம் 4 வழக்குகள் பதிவாகி உள்ளன. தாப்ரி, துவாரகா வடக்கு, தெற்கு ரோகிணி மற்றும் வடக்கு ரோகிணி ஆகிய பகுதிகளில் இதேபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இவர்களுடன் தொடர்புடைய பாதிக்கப்பட்ட வேறு யாரும் உள்ளனரா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் இருவரிடம் இருந்து, தங்க நகைகள், செல்போன், பணம், சொகுசு கார், ஸ்கூட்டர் மற்றும் போலி வாகன பதிவெண் பிளேட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இதில், சப்தர்ஜங் மருத்துவமனைக்கு வெளியே ராகுலை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், விபின் கார்டன் பகுதியில் பதுங்கியிருந்த விஜய் கைது செய்யப்பட்டார்.

விஜய்க்கு எதிராக பல வழக்குகள் பதிவாகி உள்ளன. 2016-ம் ஆண்டில் ஆனந்த் விகார் பகுதியில் நபர் ஒருவரிடம் பணம் கொள்ளையடித்ததற்காக முதன்முதலாக கைது செய்யப்பட்டார்.

2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் துப்பாக்கி முனையில் நகை கடைகளில் கொள்ளையடித்தற்காக விஜய் கைது செய்யப்பட்டார். 2022-ம் ஆண்டு திருடிய ஸ்கூட்டருடன் நின்றிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இதனை காவல் துறை துணை ஆணையாளர் (துவாரகா) அங்கித் சிங் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.